2030ல் ஜெர்மனி, ஜப்பானை முந்தி பொருளாதாரத்தில் 3வது இடத்தை இந்தியா பிடிக்கும்
25 ஐப்பசி 2023 புதன் 18:01 | பார்வைகள் : 3696
2030ம் ஆண்டில் ஜெர்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளி பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என எஸ்& பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
2023 -24 நிதியாண்டில் 3.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபி( மொத்த உள்நாட்டு உற்பத்தி) உடன் இந்தியா, உலகளவில் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிரிட்டனை முந்தி, இந்தியா 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது. தொடர்ந்து 2021 மற்றும் 2022ல் தொடர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்ததால், 2023ம் நிதியாண்டிலும் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுகிறது என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
எஸ் & பி நிறுவனத்தின் ராஜிவ் பிஸ்வாஸ் கூறியதாவது: 2022 ல் 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபி உடன் இந்தியா இருந்தது. 2030ல் இது 7.3 டிரில்லியன் ஆக அதிகரிக்கும். தொடர்ந்து, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதால், 2030ம் ஆண்டில் ஜப்பான் ஜிடிபியை இந்தியா ஜிடிபி முந்தும். இதன் மூலம் ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா இருக்கும். 2030ம் ஆண்டுக்குள் ஜெர்மனியையும் இந்திய பொருளாதாரம் முந்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்