உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ்
25 ஐப்பசி 2023 புதன் 11:18 | பார்வைகள் : 2236
உலகக் கிண்ணத்திற்கான இலங்கை கிரிக்கெட் குழாத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஐசிசி போட்டி தொழில்நுட்பக் குழுவின் அனுமதியுடனேயே அவர் இலங்கை குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை குழாத்தில் இடம்பெற்ற இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரணவுக்குப் பதிலாகவே முன்னாள் இலங்கை அணித் தலைவரும் சகலதுறை வீரருமான ஏஞ்சலோ மெத்யூஸை குழாத்தில் இணைப்பதற்கு ஐசிசி போட்டி தொழில்நுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு அமைய இங்கிலாந்து அணிக்கு எதிராக பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை 26 ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் மெத்யூஸ் விளையாடுவார் என நம்பப்படுகிறது.
221 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ஏஞ்சலோ மெத்யூஸ் மிகுந்து அனுபவசாலி ஆவார்.
இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் கடந்த நான்கு உலகக் கிண்ண அத்தியாயங்களில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
இதற்கு முன்னர் 2011, 2015, 2019 ஆகிய உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் மெத்யூஸ் விளையாடியிருந்தார்.
உபாதைகளினால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் இலங்கை அணிக்கு மெத்யூஸின் மீள்வருகை தெம்பூட்டும் என நம்பப்படுகிறது.
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரணவின் வலது தோள் பகுதியில் தசை பிரழ்வு ஏற்பட்டுள்ளதால் அவர் தொடர்ந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மதீஷ பத்திரணவுக்கு முன்னர் வழமையான அணித் தலைவர் தசுன் ஷானக்க உபாதைக்குள்ளாகி குழாத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இது இவ்வாறிருக்க, இலங்கை அணியின் பிரதான சுழல்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவும் உபாதைக்குள்ளாகி ஸ்கான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
எனினும் அவர் உடற்தகுதியுடன் இருப்பதாகவும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் எனவும் இலங்கை அணி முகாமைத்துவம் தெரிவித்தது.