Paristamil Navigation Paristamil advert login

இலங்கையின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இலங்கையின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

23 ஐப்பசி 2023 திங்கள் 02:43 | பார்வைகள் : 2920


இலங்கையின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் காலை வேளையில் பனியுடன்கூடிய காலநிலை நிலவக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதனிடையே, நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நில்வலா கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொடபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நில்வலா கங்கை நீரோட்டத்திற்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்துவரும் 3 முதல் 24 மணித்தியாலங்களில் குறித்த பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடுமென நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்