Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தை சேர்ந்தவரை பிரதமர் வேட்பாளராக பா.ஜ., அறிவித்தால் ஆதரவு: 

தமிழகத்தை சேர்ந்தவரை பிரதமர் வேட்பாளராக பா.ஜ., அறிவித்தால் ஆதரவு: 

24 ஐப்பசி 2023 செவ்வாய் 10:53 | பார்வைகள் : 2174


 

தமிழகத்தைச் சேர்ந்த பாஜ., நிர்வாகி யாரேனும் ஒருவரை  பிரதமர் வேட்பாளராக பாஜ., அறிவித்தால் கொள்கை கோட்பாடுகளை தூக்கி எறிந்து விட்டு நாங்கள்  ஆதரவு அளிப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது

திமுக, காங்கிரஸ் கட்சிதான் நீட்டை கொண்டு வந்தது. புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கான மரண சாசனம். நாட்டிலுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் தேர்வு இருக்கிறது. தகுதி இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு எந்தத் தேர்வும், தகுதியும் இல்லை. பிரதமர், முதல்வராவதற்கு என்ன தேர்வு, தகுதி இருக்கிறது

அனைவருக்கும் ஒரே கல்வி முறை இருக்க வேண்டும். திமுக, பாஜக ஆகிய கட்சிகளும் நீட் விஷயத்தில் நாடகம் ஆடுகிறது. 

ஊதிய உயர்வு கேட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் சாலையில் நின்று போராட்டம் செய்கின்றனர். அதற்கு செவி சாய்க்க அரசுக்கு நேரமில்லை.

சிபிஐ இருக்கும்போது என்ஐஏ எதற்கு. என்ஐஏ என்றால் கைது செய்வதை, கைதானவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதை வெளியில் சொல்லத் தேவையில்லை. பழிவாங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதுதான் என்ஐஏ.

திமுகவின் ஒப்புதல் இல்லாமல் நீட்டை கொண்டு வந்திருக்க முடியுமா, ஐயா உதயநிதி ஸ்டாலின் இதற்கு பதில் சொல்லட்டும். 

தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே நிர்மலா சீதாராமன் இரண்டு முறை அமைச்சராக பதவியில் நீடித்து வருகிறார். இதில், என்ன நேர்மை இருக்கிறது. 

செங்கல்லை தூக்குறது, முட்டையை தூக்குறது இதையெல்லாம் யாரை ஏமாத்துகிற வேலை. இதைப்பற்றி எல்லாம் பாராளுமன்றத்தில் விவாதித்து இருக்க வேண்டுமா, இல்லையா


ஆசிரியர் தகுதித் தேர்வில் வயதை உயர்த்தியதால் எந்த பயனுமில்லை. ஆசிரியர்கள் சம வேலை, சம ஊதியம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் அரசிடம் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் வீட்டில்தான் நிதி உள்ளது. 

9 லட்சம் கோடி கடன் வாங்கியதாக சொல்றீங்க. அதை எந்தெந்த திட்டத்திற்கு செலவு செய்தீர்கள் என்ற வெள்ள அறிக்கையை வெளியிட வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும், அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி விட்டு இவ்வளவு கடன் இருக்கிறது என்று சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். 


மின் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியதால் வறுமையில் உள்ளவர்களுக்கு ஆயிரக் கணக்கில் மின் கட்டணம் வருகிறது. 

இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கும், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்திற்கும் எந்த அடிப்படையில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் வீட்டிற்கு சென்று உயர்சாதியை சேர்ந்த ஒருவர் பாடம் நடத்துவாரா? இதில், எங்கே சமூக நீதி உள்ளது.

இல்லம் தேடி கல்வி இருக்கும்போது எதற்கு பள்ளிக்கூடம், மக்களைத் தேடி மருத்துவம் இருக்கும்போது எதற்கு மருத்துவமனை, இதையெல்லாம் பார்க்கின்ற போது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.

ஈரோடு இடைத்தேர்தலில்வாக்குகள் வாங்குவதற்காக ஒவ்வொரு வீடாக சென்று இவர்கள் செய்யாத வேலையே இல்லை. முழு பைத்தியமாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அரை பைத்தியமாக இருந்தால் என்ன செய்கிறோம் என்பதை தெரியாமல் செய்வார்கள்

நான் இவ்வளவு கேள்விகள் கேட்கிறேன். எனது ஒரு கேள்விக்காவது அவர்கள் ஒழுங்காக பதில் சொல்ல முடியுமா, ஒரு பொது விவாதம் வைக்க முடியுமா, என்னோடு தர்க்கம் செய்ய முடியுமா.

கூட்டணிக்காக மற்ற கட்சிகள் எங்களுக்கு அழைப்பு விடுகிறார்கள். ஆனால், நாங்கள் அதனை ஏற்கவில்லை. நாங்கள் எப்போதும் தனித்துதான் போட்டியிடுவோம்.

மோடி, மோடி என்று பூச்சாண்டி காட்டிதான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. மோடி இல்லனா திமுகவால் ஆட்சிக்கு வந்திருக்கவே முடியாது. இதற்காக, திமுக மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.<br><br>ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் நீட்டை ஒழிப்பதற்காக மிகப்பெரிய போராட்டம் எதுவும் நடத்தாமல், வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, தற்போது போராட்டம் நடத்தப் போவதாக, திமுக அறிவித்துள்ளது. இது, தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம்.

விசிக தலைவர் திருமாவளவன் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்து விட்டால் அடுத்தது அதிபர் தேர்தல்தான் என்று சொல்வதும் நடக்க வாய்ப்புள்ளது


பாஜகவின் கொள்கையே இந்தியன், இந்து, இந்திதான். இதனை நோக்கிதான் அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் ஒற்றை கட்சி ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துவார்கள்.

ஊர்க்காவல் படை வீரர்கள் நலனுக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்து அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய்த் தகவல்களை கூறி வருகிறார்கள். ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்தில் நடந்த பிரச்சனைகளை பார்த்தாலே இந்த ஆட்சியினுடைய லட்சணம் தெரிகிறது.

புதிய வாக்குறுதிகளை தந்தால்தான் புதிய வாக்காளர்களை கவர முடியும் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தேமுதிக தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை உயர்த்தி வைத்திருந்தது. ஆனால், தேமுதிக கூட்டணியில் இடம்பெற்றதால் வாக்கு சதவீதம் வெகுவாக சரிந்து விட்டது

நாங்கள் தனித்துப் போட்டியிடுவது தான் மக்களுக்கு பிடித்திருக்கிறது. அதனால்தான் எங்க கட்சியினுடைய வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது. அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்கு ஒரு மாற்று சக்தியாக எங்களை மக்கள் பார்ப்பதால், அந்த கட்சிகளோடு நாங்கள் கூட்டணி வைத்தால் மக்கள் எங்களை வெறுத்து விடுவார்கள்.

பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது நல்ல முடிவு. அதிமுகவிற்கு பாஜக ஒரு கூடுதல் சுமை. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் நடந்துவிடாது.

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்களில் யாராவது ஒருவரை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்தால் கொள்கை கோட்பாடுகளை தூக்கி எறிந்து விட்டு, நாங்களே அவர்களை ஆதரிக்கிறோம். தேர்தலில் அவர்கள் தோற்றாலும் கூட பரவாயில்லை. ஆனால், அறிவிக்கட்டும்.

தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் பாஜகவுக்கு அக்கறை இல்லை. புதிய நாடாளுமன்ற கட்டிட வாயிலில் உள்ள கல்வெட்டில் மூத்தமொழி என்று சொல்லக்கூடிய தமிழ்மொழியில் எழுத்துக்கள் இல்லை

மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதில் தற்போது பாதி பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும்  சுத்தமாக நிறுத்தப்பட்டு விடும். திராவிடம் என்பது ஒரு ஏமாற்று வேலை.

தேர்தலில் நின்று வெற்றி பெறாதவர்களுக்கு அல்லாம் கேபினட்ட் அமைச்சர் பதவியை பாஜக வழங்குகிறது. தமிழகத்தில் நின்று வெற்றிபெற்ற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதிலிருந்து பாஜகவினர் தமிழகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெரியவில்லையா,

இவ்வளவு பெரிய ராணுவத்தை கையில் வைத்திருக்கும் பாஜக அரசால் மீனவர்களின் பொருட்களை கொள்ளை அடிக்கும் கடல் கொள்ளையர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்