இலங்கையில் ஒரே நேரத்தில் பரவும் பல நோய்கள் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
24 ஐப்பசி 2023 செவ்வாய் 05:48 | பார்வைகள் : 3376
இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கண் நோய், வயிற்றுப்போக்கு மற்றும் சுவாசக் கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல் பரவி வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவரிடம் கேள்வியெழுப்பிய சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
" இந்த நோய் வயது வித்தியாசமின்றி பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பரவி வருகின்றது.
இந்த நிலைமைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் தங்கள் சுகாதார பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நோய்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த தற்போது சுகாதாரத் துறை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
சுகாதாரத் துறையின் தலையீட்டைப் போலவே தனிப்பட்ட சுகாதாரமும் மிகவும் முக்கியமானது.
நாட்டின் பல மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் தணிந்துள்ள நிலையில், பல பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் பாரியளவில் பதிவாகியுள்ளனர்." என அவர் தெரிவித்தார்.