Paristamil Navigation Paristamil advert login

மசாலா வடை குழம்பு

மசாலா வடை குழம்பு

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10694


 அனைவருக்கும் மசாலா வடை பற்றித் தெரியும். ஆனால் மசாலா வடை குழம்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், மசாலா வடையைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு அருமையான சுவையில் இருக்கும். மேலும் வித்தியாசமான குழம்பு செய்து சாப்பிட நினைப்போருக்கு மசாலா வடை குழம்பு ஏற்ற ஒன்றாக இருக்கும்.இங்கு மசாலா வடை குழம்பின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து சுவைத்துப் பாருங்கள்.

 
தேவையான பொருட்கள்:
 
மசாலா வடை - 10
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
மல்லிப் பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
துருவிய தேங்காய் - 5 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 5
இஞ்சி - சிறு துண்டு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 2
மிளகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மல்லி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு மற்றும் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும்.
 
பின்னர் அதில் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் இஞ்சி சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, கிராம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும்.
 
பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
 
அடுத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
 
குழம்பானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மசாலா வடைகளைப் போட்டு, குழம்பில் வடை நன்கு ஊற்றியதும், அதனை இறக்கினால், மசால் வடை குழம்பு ரெடி!!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்