சந்திர கிரகணம் 2023 - எப்போது நிகழும்? எங்கிருந்து பார்க்கலாம்?
27 ஐப்பசி 2023 வெள்ளி 09:15 | பார்வைகள் : 2097
வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (அக்டோபர் 28, 29) சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது.
சனிக்கிழமை (அக்டோபர் 28) ஆம் தேதி நள்ளிரவில் சந்திரன் பூமியின் மங்கலான நிழல் வட்டத்தில் நுழைந்தாலும் (பெனம்ப்ரல் சந்திர கிரகணம்), பூமியின் இருண்மையான நிழலில் (அம்ப்ரல் சந்திர கிரகணம்) அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலையில் நுழையும்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கிடையில் வரும் நள்ளிரவில் இந்த கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் தெரியும், என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மத்திய பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் மூலம் ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இந்த கிரகணத்தின் ‘அம்ப்ரல் கட்டம்’, அதாவது இருண்மையான நிழல் சந்திரனின் மீது விழுவது, ஞாயிறன்று (அக்டோபர் 29) அன்று அதிகாலை 01:05 மணிக்குத் தொடங்கி 02:24 மணி வரை நிகழும் என்றும் அந்த அறிக்கை கூறியிருக்கிறது.
இந்தக் கிரகணம் 1 மணி 19 நிமிடங்கள் நிகழும்.
இது மிகச்சிறிய அளவில் மட்டுமே நடக்கவிருக்கும் கிரகணம், அதாவது சந்திரனின் முழுப்பகுதியில் 0.126 என்ற மிகச்சிறிய அளவு மட்டுமே மறையும் என்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் இது பகுதி சந்திர கிரகணம்.
சந்திர கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?
சூரியகிரகணத்தைப் போலன்றி சந்திர கிரகணம் பரவலாகத் தென்படும்.
சந்திர கிரகணம் நிகழும்போது நமது பகுதியில் இரவாக இருந்தால் நம்மால் அதைப் பார்க்க முடியும்.
இம்முறை சந்திர கிரகணம் நிகழும்போது இந்தியாவில் நள்ளிரவு நேரம், ஆதலால் இந்தியாவில் இது தென்படும்.
மேலும், ‘மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு தென் அமெரிக்கா, வட-கிழக்கு வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் கிரகணம் தென்படும்,’ என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.
அடுத்த சந்திர கிரகணம் எப்போது?
இந்தியாவில் இதற்கடுத்த சந்திர கிரகணம் 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி இந்தியாவிலிருந்து தெரியும், அது முழு சந்திர கிரகணமாக இருக்கும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்குமுன் இந்தியாவில் 2022-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நடந்த முழு சந்திர கிரகணம் தென்பட்டது. அதுதான் கடைசியாக இந்தியாவில் தென்பட்ட சந்திர கிரகணம்.
சந்திர கிரகணம் எப்படி நிகழ்கிறது?
முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, சந்திர கிரகணம் ஏற்படும்.
இந்த முழு நிலவின் மேல் பூமியின் நிழல் படும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படும். அதேபோல் சந்திரனின் ஒரு பகுதியின்மேல் பூமியின் நிழல் விழுந்தால் பகுதி சந்திர கிரகணம் ஏற்படும்.
அப்படியானால், பூமியைச் நிலவு சுற்றிவருவதால், ஒவ்வொரு மாதமும் ஏன் சந்திரகிரகணம் ஏற்படுவதில்லை என்ற கேள்வி எழலாம்.
நிலவு பூமியைச் சுற்றி வந்தாலும், எப்போதும் அது பூமியின் நிழலுக்குக்கீழ் வருவதில்லை. பூமியைச் சுற்றிய நிலவின் வட்டப்பாதை, சற்றுச் சாய்வானது. அதனால் நிலவு பூமிக்குப் பின் இருந்தாலும் அதன்மீது பூமியின் நிழல் படாமல் போகலாம்.
இதனால் சந்திர கிரகணம் அரிதாகவே நிகழ்கிறது.
சந்திர கிரகணத்தில் எத்தனை வகைகள் உள்ளன?
சந்திர கிரகணத்தில் இரண்டு வகைகள் உள்ளன.
முழு சந்திர கிரகணம்: நிலவும் சூரியனும் பூமிக்கு எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
பகுதி சந்திர கிரகணம்: பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டும் நிலவின் மீது விழும்போது பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.
சந்திர கிரகணத்தின் சில கட்டங்களில், நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும். ஏனெனில், பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியின் மற்ற நிறங்களை உள்வாங்கிக்கொள்கிறது. அலைநீளம் அதிகமுள்ள சிவப்பு மட்டும் நிலவை அடைகிறது.
சந்திர கிரகணத்தின்போது நிலவின் மேற்பரப்பில் இருந்து பார்த்தால், பூமியின் விளிம்புகளைச் சுற்றியிருக்கும் சூரிய ஒளி மட்டுமே நிலவினை அடையும். கிரகணத்தின் போது அங்கிருந்து ஒரு பார்வையாளர் பூமியின் அனைத்து சூரியோதயங்களையும் சூரியாஸ்தமனங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும், என்று நாசா வலைதளம் கூறுகிறது.