இயக்குநராக வென்றாரா மனோஜ் ? மார்கழி திங்கள் - விமர்சனம்
27 ஐப்பசி 2023 வெள்ளி 13:26 | பார்வைகள் : 3068
பள்ளியில் படிக்கும் மாணவன், மாணவி இருவரிடைய, 'அறியாத வயதில், புரியாத மனதில்' காதல் என்பதெல்லாம் தற்போது மக்களிடம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட காதல் கதைகளைப் பார்த்து சிறுவர், சிறுமியர் கூட கெட்டுப் போகும் அளவிற்கு உள்ளது என்பதுதான் பலரது கருத்து. சாதி மீறிய காதல் என காரணத்தைச் சொல்லி இந்தப் படத்தில் அப்படியான ஒரு பள்ளிக் காதலைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மனோஜ் கே பாரதிராஜா.
பெற்றோர் இறந்து போய்விட்டதால் தாத்தா பாரதிராஜாவால் வளர்க்கப்படுகிறார் ரக்ஷனா. பள்ளியில் முதல் மாணவியாக இருப்பவர். அவருடைய பள்ளியில் நன்றாகப் படிக்கும் மற்றொரு மாணவர் ஷியாம் செல்வன். ரக்ஷனா, ஷியாம் செல்வன் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் காதல் வருகிறது. தனது தாத்தாவிடம் காதலைச் சொல்கிறார் ரக்ஷனா. அதைக் கேட்ட அவரும் கல்லூரி சென்று படித்து முடித்த பின் திருமணம் செய்து வைப்பதாகக் கூறுகிறார். மூன்று ஆண்டுகள் கழித்து ஊருக்குத் திரும்பி வருகிறார். ஆனால், ஷியாம் குடும்பத்தினர் அந்த ஊரிலேயே இல்லை. அவர்கள் எங்கே போனார்கள் எனத் தேட ஆரம்பிக்கிறார் ரக்ஷனா. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கடந்த சில வருடங்களில் வரும் தமிழ்ப் படங்களில் காதலர்களுக்கு எதிர்ப்பாக இருக்கும் அதே சாதி விஷயத்தைத்தான் இந்தப் படத்திலும் கையாண்டிருக்கிறார்கள். ஆனால், அதிர்ச்சியைத் தரக் கூடிய ஒரு கிளைமாக்ஸை வைத்துவிட்டு அதன் தாக்கம் நம் மனதில் அழுத்தமாகப் பதியாதபடி சொல்லியிருக்கிறார்கள்.
புதுமுகங்கள் ஷியாம் செல்வன், ரக்ஷனா பள்ளி மாணவன், மாணவியாக நடித்திருக்கிறார்கள். ஷியாமை விட ரக்ஷனாவுக்குத்தான் படத்தில் காட்சிகளும், முக்கியத்துவமும் அதிகமாக இருக்கின்றன. அவரும் முதல் பட நாயகி போலில்லாமல் சமாளித்து நடித்திருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சரியாகச் செய்ய முயற்சித்திருக்கிறார் புதுமுக நடிகர் ஷியாம் செல்வன்.
தாத்தா கதாபாத்திரத்தில் பாரதிராஜா, யோசித்து யோசித்துப் பேசி நடிக்கிறார். வில்லனாக ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார் சுசீந்திரன். ரக்ஷனாவின் தோழியாக நக்ஷா.
படம் காதல் திரைப்படம் என்பதை அவ்வப்போது நினைவூட்டுவது இளையராஜாவின் இசைதான். காதல் காட்சிகளில் அவரது இசை வென்றிருக்கிறது. வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது.
காதல் காட்சிகளால் கரையேற நினைத்த மார்கழித் திங்கள் விறுவிறுப்பற்ற திரைக்கதையால் மந்தமாகக் கழிகிறது.