தாமஸ் அல்வா எடிசனின் இறுதி மூச்சு : பாதுகாக்கும் அருங்காட்சியகம்
26 ஐப்பசி 2023 வியாழன் 06:15 | பார்வைகள் : 2791
பிரபல விஞ்ஞானி தாமஸ் அல்வா எடிசனின் கடைசி மூச்சினை ஒரு அருங்காட்சியத்தில் பாதுகாத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்விளக்கு, திரைப்படக்கருவி, கிராமபோன் உள்பட இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1,300. அவற்றில் 1,093 கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரராக இருப்பது ஒருவர் மட்டுமே.
இவர் அமெரிக்காவில் ஒஹயோ மாநிலத்தில் மிலான் என்கிற நகரத்தில் 1847-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் திகதி பிறந்தார்.
இவரின் கடைசி மூச்சை பாதுகாத்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாமஸ் அல்வா எடிசனின் நண்பரும், அமெரிக்க பெரும்புள்ளியுமான ஹென்ரி ஃபோர்ட் என்பவர் எடிசனின் மூச்சுக் காற்றை பாதுகாத்து வைக்கச் சொல்லி கேட்டதாக கூறப்படுகின்றது.
ஆகவே மிச்சிகனில் உள்ள ஹென்ரி ஃபோர்டின் அருங்காட்சியகமானது இவரின் மூச்சை ஒரு டெஸ்ட் டியூபில் வைத்து பாதுகாத்து வருகிறது.
“எடிசனுக்கு வேதியியல் மீது தான் அதிக ஆர்வம் இருந்தது. இதனாலேயே அவரது படுக்கைக்கு அருகில் டெஸ்ட் டியூப்கள் இருந்தன.
அவர் இறந்த மறுகணம் இந்த டெஸ்ட் டியூப்களை நான் பாரஃபின் வைத்து அடைக்கச் சொல்லி அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் கூறினேன்.
பின்னர் அந்த டெஸ்ட் டியூப்களில் ஒன்றினை ஹென்ரி ஃபோர்டிடம் நான் கொடுத்தேன்” என எடிசனின் மகனான சார்லஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் மிச்சிகன் அருங்காட்சியகத்தில் இருப்பது எடிசனின் மூச்சுக் காற்று தானா என்பதற்கு உண்மையான சான்றுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.