உலகக்கோப்பையில் இலங்கை ஜாம்பவானின் சாதனையை முறியடித்த வார்னர்!
26 ஐப்பசி 2023 வியாழன் 08:47 | பார்வைகள் : 2188
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 6வது உலகக்கோப்பை சதத்தை நிறைவு செய்தார்.
டெல்லி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் இன்றைய உலகக்கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.
மார்ஷ் 9 ஓட்டங்களில் வெளியேற, வார்னர் - ஸ்டீவன் ஸ்மித் கூட்டணி நெதர்லாந்து பந்துவீச்சை சோதித்தது.
அரைசதம் விளாசி இந்த உலகக்கோப்பையில் ஃபார்மிற்கு வந்த ஸ்மித் 71 ஓட்டங்கள் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய மார்னஸ் லபுசாக்னே 47 பந்துகளில் 62 ஓட்டங்கள் விளாசினார்.
இதற்கிடையில் சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்ட டேவிட் வார்னர் 91 பந்துகளில் சதம் அடித்தார்.
இது அவருக்கு 22வது ஒருநாள் சதம் ஆகும்.
அத்துடன் 6வது உலகக்கோப்பை சதம் ஆகும். இதன்மூலம் இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காராவை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
மேலும், உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 2 சதங்கள் அடித்த 4வது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் வார்னர் பெற்றார்.
உலகக்கோப்பையில் தொடர்ந்து 2 சதங்கள் அடித்த அவுஸ்திரேலிய வீரர்கள்:
மார்க் வாக் (1996)
ரிக்கி பாண்டிங் (2003-07)
மேத்யூ ஹேடன் (2007)
டேவிட் வார்னர் (2023)