சீனப் பயணம் வெற்றிகரமானதா...?
26 ஐப்பசி 2023 வியாழன் 09:38 | பார்வைகள் : 2609
சீனாவின் பெய்ஜிங்கில் பி.ஆர்.ஐ. எனப்படும், பட்டையும் பாதையும் திட்டத்தின் மூன்றாவது மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்று விட்டு நாடு திரும்பியிருக்கிறார்.
கடந்த ஆண்டு பெரும் குழப்பங்களுக்குள் நாடு சிக்கியிருந்த போது, முதலில் பிரதமராகவும், பின்னர் ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் செய்திருந்த போதும், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறை.
இந்தியாவுக்கு கூட மூன்று மாதங்களுக்கு முன்னர் தான், அவரது முதல் பயணம் இடம்பெற்றது.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு கை கொடுக்கும் முக்கியமான இரண்டு நாடுகள் இந்தியாவும் சீனாவும் தான்.
பொருளாதார நெருக்கடியின் போது 4 பில்லியன் டொலர்களைக் கொடுத்தது இந்தியா.
சீனா, 8 பில்லியன் டொலருக்கும் அதிகமான கடன்களைக் கொடுத்திருக்கிறது.
இந்த இரண்டு நாடுகளுடன் இராஜதந்திர ரீதியான நெருக்கத்தையும், பொருளாதார உறவுகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இலங்கைக்கு இருக்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்தியாவும் சீனாவும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கொண்டு வரக்கூடிய நாடுகளாகவும் இருக்கின்றன.
அதனால் தான் அண்மையில் சீனா, இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை அரசாங்கம் விசா கட்டணங்களை அறவிடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது.
இலங்கையில் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கும், இலங்கைக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதற்கும் இந்த இரண்டு நாடுகளும் தயாராக இருக்கின்றன.
ஆனால், இந்தப் பொருளாதார உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் போட்டி தான் தடையாக இருக்கிறது.
இந்த இரண்டு நாடுகளும் தங்களை எதிரி நாடுகளாக அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. கடுமையான போட்டி நாடுகளாகவே அடையாளப்படுத்திக் கொள்கின்றன.
ஆனாலும், மறைமுகமாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.
சீனக் கடற்படையின் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 ஐ இலங்கைக்குள் வர அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில் காணப்படுகின்ற இழுபறி ஒன்றே, இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள், மோதல்களை வெளிப்படுத்த போதுமானது.
இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அல்லது முரண்பாடுகளைத் தாண்டியே பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை இருக்கிறது.
இலங்கையின் புவிசார் அமைவிடம் தான் இந்த சிக்கலுக்குக் காரணம். இலங்கையின் அமைவிடத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக, அல்லது தங்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்திக் கொள்வதற்காக, அல்லது தங்களுக்கு எதிராக வேறெவரும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத் தான், இந்தியாவும் சீனாவும் இந்தப் போட்டியில் ஈடுபடுகின்றன.
இந்த புவிசார் அமைவிட முக்கியத்துவத்தினால், இந்தியாவினதோ, சீனாவினதோ சிறகுக்குள் மாத்திரம் இருந்து விட முடியாத சிக்கல் நிலையும் இலங்கைக்கு இருக்கிறது.
இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு- கொழும்பு தன்னை ஒரு அணிசேரா நாடு என்று காண்பிக்கவே முயற்சித்து வந்திருக்கிறது.
ஆனால், அதற்கு இதுவரை மேற்கொண்ட எந்த முயற்சிகளும், முழுமையான பலனைக் கொடுத்திருக்கவில்லை.
சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப, பிரச்சினைகளின் தன்மைக்கு ஏற்ப அவ்வப்போது இந்த சமநிலைக்கான போராட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இத்தகைய போராட்டம் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் தான், சர்வதேச ஒத்துழைப்புக்கான மூன்றாவது பி.ஆர்.ஐ. மாநாட்டுக்காக பெய்ஜிங் சென்றிருந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இந்த மாநாட்டுக்கான அழைப்பைக் கருத்தில் கொண்டு அவரது பயணம் திட்டமிடப்பட்டிருந்தாலும், சீனாவிடம் அதிகளவு பொருளாதார ஒத்துழைப்புகள், முதலீடுகளை பெற்றுக் கொள்வதும், கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை பெற்றுக் கொள்வதும் தான் அந்தப் பயணத்தின் நோக்கமாகும்.
இந்தப் பயண நோக்கத்தை ரணில் விக்கிரமசிங்கவினால் அடைய முடிந்திருக்கிறதா என்பது தான் இப்போதுள்ள முக்கியமான கேள்வி.
சர்வதேச ஒத்துழைப்புக்கான மூன்றாவது பி.ஆர்.ஐ. மாநாட்டில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் சீனா 100 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக பி.ஆர்.ஐ. திட்டத்தில் முதலீடு செய்யப் போகிறது.
இது இந்த திட்டத்தில் பங்காளிகளாக இணைந்து கொள்ளுகின்ற நாடுகளின், குறிப்பாக வளரும் நாடுகளின் பொருளாதாரங்களில் முதலீடு செய்யப்படும் அல்லது கடனாக வழங்கப்படும்.
இந்த முதலீடு அல்லது கடன் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த திட்டத்துடன் இணைந்திருக்கும் நாடுகளுக்கு கிடைக்கப் போகும் பெரு வாய்ப்பாக இருக்கும்.
அதேவேளை இந்தத் திட்டத்தில்
இணைந்து கொள்ளும் பங்காளி நாடுகளுக்கு சீனாவின் மிகப்பெரிய சந்தையைத் திறந்து விடுவதற்கும் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் அறிவித்திருக்கிறார்.
இந்த இரண்டு அறிவிப்புகளும் இலங்கை உள்ளிட்ட பி.ஆர்.ஐ. பங்காளி நாடுகளுக்கும், சீனா தனது ஆதிக்கத்தை விரிவாக்குவதற்கு குறி வைத்திருக்கும் நாடுகளுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், இலங்கைக்கு சீனா முன்னுரிமை கொடுக்கிறது. இந்தியாவுக்கு மிக அருகாக இருக்கும் இலங்கை தீவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்குப் பெற்றிருக்கிறது.
கொழும்பு துறைமுகத்தில் ஒரு கொள்கலன் முனையத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது.
ஆக, இலங்கையின் அபிவிருத்தியில் ஒரு பங்காளியாக மாத்திரம் சீனா இணைந்திருக்கவில்லை. இலங்கையைத் தனது எதிர்கால பாதுகாப்புத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடிய இடமாகவும் அடையாளம் கண்டிருக்கிறது சீனா.
இலங்கையை சீனா தனது பாதுகாப்பு நலன்கள், தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா, இல்லையா என்ற கேள்வி இங்கு முக்கியமில்லை.
அது நடைமுறைச் சாத்தியமாகவோ, சாத்தியமற்றதாகவோ இருக்கலாம்.
அவ்வாறான எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும் இடங்களில் ஒன்றாக இலங்கையை சீனா அடையாளப்படுத்தியிருக்கிறது என்பதே கவனிக்க வேண்டியது.
அவ்வாறான இடங்களில் சீனாவின் செல்வாக்கை அதிகரிப்பது முக்கியமான தேவைப்பாடாக இருக்கிறது.
அந்த இலக்கின் ஊடாகப் பார்த்தால், அடுத்த 10 ஆண்டுகளில் சீனா பி.ஆர்.ஐ. திட்டத்தில் செய்யப் போகும் 100 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியில் ஒரு குறிப்பிட்டளவு இலங்கைக்கு கிடைக்கும் சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன.
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களிலோ, அல்லது உட்கட்டமைப்புத் திட்டங்களிலோ சீனா அந்த முதலீட்டைச் செய்யுமாயின், அது ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்துக்கு கிடைக்கின்ற மிகப் பெரிய வெற்றியாக அமையும்.
சீனாவின் நிதியமைச்சர் லியூ குன் மற்றும் சீனாவின் உதவிப் பிரதமர் டிங் சியோசியாங் உள்ளிட்டவர்களுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இலங்கையில் முதலீட்டை அதிகரிப்பது குறித்து பேசியிருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இதன்போது, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில், நீண்டகால, இடைக்கால கடன் திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனத் தரப்பி்ல் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி மற்றும் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக்கு சீனா உதவும் என்று சீனாவின் உதவிப் பிரதமர் உறுதி அளித்திருக்கிறார்.
எவ்வாறாயினும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான சீனாவின் 100 பில்லியன் டொலர் திட்டம் மட்டுமே இப்போது அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, அது எவ்வாறு எந்தெந்த நாடுகளுக்கு பகிரப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.
அது அடுத்த கட்டம். அந்தக் கட்டத்தில் தான் இலங்கை எந்தளவுக்கு நன்மையைப் பெற முடியும் என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும்.
சீனாவின் முதலீட்டை எதிர்பார்க்கும் இலங்கை கடன்களை எதிர்பார்க்கவில்லை. ஏற்கெனவே சீனாவின் கடன்களால் தான் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
இலங்கை அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளாவிடினும், புதிய கடன்களைப் பெற்றுக் கொள்வதில் உள்ள ஆபத்தை ரணில் விக்கிரமசிங்கவினால் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.
அதனால் தான் அவர் கடன்களை பெறுவதை விட முதலீடுகளை அடைவதில் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நன்றி வீரகேசரி