ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி
30 ஐப்பசி 2023 திங்கள் 08:28 | பார்வைகள் : 2896
இந்தியாவில் நடைபெற்றுவரும் 13 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் சம வெற்றி தோல்விகளைக் கொண்டுள்ள இலங்கையும் ஆப்கானிஸ்தானும் பூனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (30) ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.
இரண்டு அணிகளும் தலா 4 புள்ளிகளைக் கொண்டுள்ள போதிலும் நிகர ஓட்ட வேக வித்தியாச அடிப்படையில் இலங்கை 5 ஆம் இடத்திலும் ஆப்கானிஸ்தான் 7ஆம் இடத்திலும் இருக்கின்றன.
இந் நிலையில், அரை இறுதி வாய்ப்பை பெறும் முயற்சியாக ஆப்கானிஸ்தானை வெற்றிகொள்ளும் குறிக்கோளுடன் இலங்கை இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
கடந்த சில மாதங்களில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் நான்கு தடவைகள் விளையாடியுள்ள இலங்கையும் ஆப்கானிஸ்தானும் இப்போது ஐந்தாவது தடவையாக சந்திக்கவுள்ளன.
இரண்டு அணிகளும் நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்தை வெற்றிகொண்ட நிலையில் பாகிஸ்தானிடம் இலங்கை தோல்வியை சந்தித்ததுடன் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது.
எவ்வாறாயினும் இரண்டு அணிகளிலும் இலங்கை சற்று பலம்வாய்ந்த அணியாக தென்படுகிறது.
உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் நடைபெற்ற ஆசிய கிண்ணம் உட்பட 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றியீட்டிய இலங்கை, இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணியை எந்தவகையிலும் இலங்கை குறைத்து மதிப்பிடப் போவதில்லை.
மேலும் தற்போதைய உலகக் கிண்ண அத்தியாயத்தில் நான்கு தொடர்ச்சியான அரைச் சதங்களைத் பெற்றுள்ள ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க மிகச் சிறப்பான ஆற்றலுடன் விளையாடிவருவதும் இலங்கைக்கு பலம் சேர்ப்பதாக அமைகிறது.
அவருடன் ஒரு சதம் குவித்த சதீர சமரவிக்ரம மத்திய வரிசையில் ஒரு தூணாக திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
ஆரம்ப இரண்டு போட்டிகளில் ஒரு சதம் உட்பட திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் அணித் தலைவரான பின்னர் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக பிரகாசிக்கத் தவறியுள்ளார். ஆனால் அவர் இன்றைய போட்டியில் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் மீளவும் விளையாடுவது இலங்கைக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைகிறது.
இங்கிலாந்துடனான போட்டியில் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 5 ஓவர்கள் பந்து வீசி 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றி தன்னிடம் திறமை இருக்கிறது என்பதை ஏஞ்சலோ மெத்யூஸ் நிரூபித்தார்.
துரதிர்ஷ்டவசமாக இலங்கை அணி உபாதைகள் காரணமாக தொடர்ந்து பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகனான லஹிரு குமார உபாதைக்குள்ளாகி நாடு திரும்புவதுடன் அவருக்குப் பதிலாக துஷ்மன்த சமீர அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். துஷ்மன்த சமீர இன்றைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ஆரம்பத் துடுப்பாட்டத்தில் மாற்றம் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 5 போட்டிகளில் ஒரு போட்டியைத் தவிர்ந்த ஏனையவற்றில் பிரகாசிக்கத் தவறிய குசல் பெரேராவுக்குப் பதிலாக திமுத் கருணாரட்ன அணியில் இணைக்கப்படுவார் என கருதப்படுகிறது.
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் பெரேரா அல்லது திமுத் கருணாரட்ன, குசல் பெரேரா (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, கசுன் ராஜித்த அல்லது துனித் வெல்லாலகே அல்லது துஷான் ஹேமன்த, டில்ஸான் மதுஷன்க.
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷஹிதி (தலைவர்), அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், இக்ரம் அலிகில், மொஹமத் நபி, ராஷித் கான், முஜீப் உல் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அஹ்மத்.