பா.ஜ.,வை குறைத்து மதிப்பிட்டால்...
31 ஐப்பசி 2023 செவ்வாய் 12:13 | பார்வைகள் : 3073
பா.ஜ.,- காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், 2021 தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்காக தேர்தல் வியூகங்களை வகுத்தார்
'இனி எந்த கட்சிக்கும் தேர்தல் ஆலோசகராக பணியாற்றப் போவதில்லை' என்று அறிவித்துள்ள பிரசாந்த் கிஷோர் சில நாட்களுக்கு முன், 2024 லோக்சபா தேர்தல் குறித்து கலந்துரையாடினார். அவர் கூறியது:
'இண்டியா' கூட்டணியில் வலுவான மாநில கட்சிகள் இணைந்துள்ளன. ஆனால், சட்டசபை தேர்தலுக்கும், லோக்சபா தேர்தலுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன.
மாநில சட்டசபை தேர்தல்களில் மாநில உரிமை சார்ந்த விஷயங்கள் முன்னணியில் இருக்கும். ஆனால், லோக்சபா தேர்தலில் தேசியவாதம், ஹிந்துத்துவா ஆகியவை பா.ஜ.,வுக்கு சாதகமானவை.
இண்டியா கூட்டணி மூன்று கூட்டங்களை நடத்தினாலும், பா.ஜ.,வை வீழ்த்த வலுவான கொள்கையை வகுக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்பது மக்களுக்குத் தெரிகிறது.
ஆனாலும், மோடிக்கு மாற்றாக வலுவான பிரதமர் வேட்பாளர் இல்லை. இது பா.ஜ.,வுக்கு சாதகமான அம்சம். எவ்வளவு தான் பண பலம் இருந்தாலும் மக்கள் ஆதரவு இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
எதிரியின் பலத்தை தெரிந்து கொண்டால் தான் அவர்களை வீழ்த்த முடியும். மேற்குவங்கத்தில் பா.ஜ.,வே இல்லை என திரிணமுல் காங்கிரஸ் கூறி வந்தது. ஆனால், 2019 லோக்சபா தேர்தலில் அங்கு மொத்தம் உள்ள, 42 தொகுதிகளில், 18ல் பா.ஜ., வென்றது.
அதுபோல, தமிழகத்தில் பா.ஜ., இல்லை என்று எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. பா.ஜ.,வின் வளர்ச்சியை கணிக்க தவறினால் ஒருநாள் அவர்கள் வளர்ந்து நிற்பர்; தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக பா.ஜ., மாறும்.
அடுத்த தேர்தலிலேயே பா.ஜ., வெற்றிபெறும் என்று சொல்லவில்லை. ஆனால், அடுத்த 5 - 10 ஆண்டுகளில் படிப்படியாக ஓட்டு சதவீதத்தை பா.ஜ., அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்