கோடைகால terrasses : இன்று இறுதி நாள்!
31 ஐப்பசி 2023 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 7056
பரிசில் உள்ள உணவகங்கள், அருந்தகங்கள் போன்றவற்றில் முற்றங்கள் (terrasses) அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டினை போலவும் இவ்வாண்டு கோடை காலத்தில் இந்த terrasses அமைக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. உணவக உரிமையாளர்கள், தங்களது நிலையங்களுக்கு முன்பாக சிறிய அளவிலான இடம் ஒன்றை பெற்றுக்கொண்டு, அதில் இருக்கைகள் அமைக்க முடியும். இந்த அனுமதி ஏப்ரல் 1 ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது. ஏழு மாதங்களின் பின்னர் இன்று ஒக்டோபர் 31 ஆம் திகதியுன் அது நிறைவுக்கு வருகிறது.
இந்த கோடைகாலத்தில் பரிசுக்கு 12 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருந்தனர். உணவக மற்றும் அருந்தகங்களின் உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும், இந்த கோடைகாலம் மிகவும் வருவாய் நிறைந்த பகுதியாக அமைந்ததாகவும் பலர் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட நான்காயிரம் முற்றங்கள் பரிசில் அமைக்கப்பட்டிருந்தன. இந்த முற்றம் அமைப்பதற்காக சதுர மீற்றர் பரப்பளவுக்கு 68 யூரோக்கள் முதல் 392 யூரோக்கள் வரை (இடம் அமைந்திருக்கும் பகுதியை கணக்கில் கொண்டு) கட்டணம் அறவிடப்பட்டிருந்தது.
அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பரிசில் இடம்பெற உள்ளதை அடுத்து, இந்த முற்றம் அமைப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் கொண்டுவரப்பட உள்ளன. ஒரே நிறமுறைய கூரைகள் அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதேவேளை, இரவு 10 வரை அனுமதிக்கப்பட்டும் இந்த முற்றங்கள், அடுத்த ஆண்டு நள்ளிரவு 12 மணி வரை அனுமதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.