யாழில் விடுவிக்கப்பட்ட காணிகளை அபகரிப்பதற்கு முயற்சி
29 ஐப்பசி 2023 ஞாயிறு 02:27 | பார்வைகள் : 3392
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மாங்கொல்லைப் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளை அபகரிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணி உரிமையாளர்கள் இது குறித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
கடந்த 33 வருட காலத்துக்கு அதிகமாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியதையடுத்து, குறித்த காணிகள் அதன் உரிமையாளர்களால் அடையாளப்படுத்தி எல்லைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் கனியவள கூட்டுத்தாபன அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் நேற்று முன்தினம் குறித்த பகுதிக்கு பிரவேசித்து, இந்தக் காணிகள் தமது கூட்டுத்தாபனத்துக்குரியது என குறிப்பிட்டதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தாம் 40 வருடங்களுக்கு முன்பே காணி உரிமையாளர்களிடம் இருந்து அவற்றை கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த காணிகளை தாம் எவருக்கும் விற்பனை செய்யவில்லை என தெரிவித்த காணி உரிமையாளர்கள், தம்மிடம் காணிகளுக்கான உரித்துகளை காண்பிக்குமாறு குறித்த அதிகாரிகள் பணித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.