காஸாவில் இருந்து தப்பிக்க வழியும் இல்லை- எச்சரிக்கை விடுக்கும் ஐ.நா
29 ஐப்பசி 2023 ஞாயிறு 08:18 | பார்வைகள் : 3115
இஸ்ரேலின் பாரிய தாக்குதலால் காஸாவில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் எச்சரித்துள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் இராணுவம் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில் மூன்று வாரங்களாக நடந்துவரும் போரில் நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டமாக்கியதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலை நீடிக்கும் என்றால், பல ஆயிரக்கணக்கான மக்கள் மேலும் கொல்லப்பட வாய்ப்புள்ளதாகவே வோல்கர் டர்க் எச்சரித்துள்ளார்.
காஸாவில் பாதுகாப்பான இடம் என்பது எதுவும் இல்லை, அங்கிருந்து பதுகாப்பாக வெளியேற வழியும் இல்லை.
காசாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்காக கவலை கொள்வது போன்று, அங்குள்ள சக ஊழியர்களுக்காகவும் நான் மிகவும் கவலைப்படுகிறேன் என வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 வாரங்களில் காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள உக்கிர தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,000 கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்படாமல் உள்ளனர் எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தப் பகைமைகள் முடிவடையும் போது, உயிர் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளின் இடிபாடுகளையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளையும் மட்டுமே எதிர்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.