Paristamil Navigation Paristamil advert login

யதார்த்தங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள்

யதார்த்தங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள்

29 ஐப்பசி 2023 ஞாயிறு 10:12 | பார்வைகள் : 2099


எந்தவொரு காரியத்தை செய்வதற்கும் சரியான திட்டமிடுதல் அவசியம். அதுவே செய்யும் வேலையை வரைமுறைப்படுத்துதற்கு முன் அதன் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து செயல்பட வழிகாட்டும். நிதானமாக இலக்கை நோக்கி ஒவ்வொரு அடியையும் சரியாக எடுத்து வைக்கவும், குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்யவும் துணைபுரியும். அப்படி திட்டமிட்டு வேலை செய்யும்போது ஒருசில விஷயங்களில் சமரசம் தேவைப்படலாம்.

உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஏதேனும் சிக்கல் எழும்போது அதனை எதிர்கொள்ள போராட வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் விட்டுக்கொடுத்து செல்லும் நிலை வரலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், `நான் எடுத்து வைத்த அடியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்' என்று பிடிவாதம் பிடிப்பதில் அர்த்தமில்லை. சில மாற்றங்களை செய்தே தீர வேண்டும் எனும் பட்சத்தில் அதனை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

அதை விடுத்து வேறு என்ன மாற்று ஏற்பாடு செய்யலாம் என்று சிந்திப்பது திட்டமிட்டு செய்துவரும் வேலைக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே அமையும். எந்த வேலையும் திட்டமிட்டபடியே சுமுகமாக முடிந்துவிடுவதில்லை. இடையூறுகள் ஏற்படும்போது அதற்கேற்ப திட்டத்திலும் மாற்றங்களை செய்து எப்படி விரைவாக செய்து முடிக்கலாம் என்று சிந்திப்பதே புத்திசாலித்தனம்.

நாம் நம்முடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி விட்டதாக மற்றவர்கள் தவறாக நினைத்து விடுவார்களோ?' என்று கவலைப்பட தேவையில்லை. எந்தவொரு காரியத்தையும் தொடங்கும்போதே மாற்றங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்துடனே களம் இறங்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை கிடைக்கும். சூழ்நிலைகளுக்கு தக்கபடி சாதுரியமாக செயல்படும் மனத்தெளிவும் பிறக்கும்.

அதைவிடுத்து பிடிவாத குணத்தோடு இருந்தால் மனம் அலைபாயும். `எப்படி செய்து முடிக்கப்போகிறோமோ' என்ற பதற்றத்துடனேயே வேலையில் முழுகவனத்தை பதிக்க முடியாமல் தடுமாற வேண்டியிருக்கும். பிடிவாதத்தை தளர்த்துவதால் பலவீனமாகிவிட்டோமோ? என்று அச்சப்படதேவையில்லை. யதார்த்தங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டு சுமுகமாக செயல்படுவதே புத்திசாலித்தனம். எடுத்த காரியமும் சுலபமாக முடியும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்