Paristamil Navigation Paristamil advert login

பெரும்பான்மை வாக்கு மூலம் நல்லிணக்கத்தைச் சாதிக்க முடியாது

பெரும்பான்மை வாக்கு மூலம் நல்லிணக்கத்தைச் சாதிக்க முடியாது

29 தை 2024 திங்கள் 09:59 | பார்வைகள் : 751


இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தை  பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றுவதில் அரசாங்கம் நடந்துகொண்ட முறை மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். மூன்றாவது வாசிப்பின்போது சட்டமூலம் மீது வாக்கெடுப்பை நடத்தவேண்டும். எதிர்க்கட்சி கேட்டுக்கொண்ட போதிலும், வாக்கெடுப்புக்கு விடாமலே அது நிறைவேற்றப்பட்டது. 

மேலும், முதலில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டமூலத்துக்கு  உயர்நீதிமன்றம் விதப்புரை செய்த திருத்தங்களில் பெருமளவானவை சேர்க்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியிருக்கிறது.

இத்தகைய குறைபாடுகள் காரணமாக பாராளுமன்ற சபாநாயகர் சட்டமூலத்தைச் சான்றுப்படுத்தி கைச்சாத்திட்டு சட்டமாக்கிவிடக்கூடாது என்று எதிர்க்கட்சி விடுத்திருக்கும் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிமடுக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை கேட்டுக்கொள்கிறது. 

பாராளுமன்ற கூட்டத் தொடரை ஜனாதிபதி ஒத்திவைத்திருப்பது சகல திருத்தங்களும் சட்டத்தில் சேர்க்கப்படுவதை உறுதிசெய்வதற்கு சந்தர்ப்பத்தை கொடுக்கிறது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், சட்டவாக்கச் செயன்முறையின்போது சகல திருத்தங்களும் உகந்த முறையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனவா என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் ஆராயும் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்திருப்பதை நாம் வரவேற்கிறோம். 

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையாகும். அது மீறப்பட்டால் ஜனநாயக செயன்முறை ஆபத்துக்குள்ளாகும்.

இத்தகைய பின்னணியில், இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் கவனத்துக்கு கொண்டுவர தேசிய சமாதானப் பேரவை விரும்புகிறது. 

கடந்த வாரம் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தையும் ஜனவரி 9 தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலக சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றியதைப் போன்று எதிர்க்கட்சியினதோ அல்லது சிவில் சமூகத்தினதோ கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் இந்த சட்டமூலத்தின் விடயத்திலும் அரசாங்கம் நடந்துகொள்ளக்கூடாது என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.

முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் கமிட்டிகளின் அறிக்கைகளையும் அவதானிப்புகளையும் ஆராய்வதற்கு நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருப்பது மிகவும் கவலைக் குரியதாகும்.

கடந்த வருடம் பெப்ரவரியில் நவாஸ் ஆணைக்குழுவினால் கையளிக்கப்பட்ட இடைக்கால சுருக்க அறிக்கையில் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை பற்றி குறிப்பிடப்பட்டதுடன் அதன் உருவரை குறித்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்போது விளக்கமாக கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நவாஸ் ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை காத்திராமலும் எதிரணி அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூகத்துடனும் குறைந்தளவு கலந்துரையாடலுடனும் உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கம் காட்டுகின்ற அவசரம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அப்பால் வேறு ஏதாவது  நோக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.

பாதிக்கப்பட்ட இன, மத சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவு இல்லாவிட்டாலும் கூட இந்த ஆணைக்குழு சட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றுவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறும் ஆர்வம் அரசாங்கத்துக்கு இருக்கிறது போன்று தெரிகிறது.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் போன்று உத்தேச உண்மை ஆணைக்குழுவின் நோக்கமும் தேசிய நல்லணக்கச் செயன்முறையை வலுப்படுத்துவதே ஆகும். அதனால் பாராளுமன்றத்தில் அரசாங்கம் தனக்கு இருக்கின்ற பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி அவசரமாக சட்டமூலத்தை நிறைவேற்றுவதை விடுத்து எதிரணியையும் இன, மத சிறுபான்மைச் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளுடன் கருத்தொருமிப்பைக் கண்டு அதன் அடிப்படையில் செயற்படவேண்டியது அவசியமாகும்.

உத்தேச உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட்டு நிறைவேற்றுவதற்கு முன்னதாக அரசாங்கம் எதிரணி கட்சிகளுடனும் சிவில் சமூகத்துடனும் கலந்துரையாடி அவற்றின் கருத்தொருமிப்பைப் பெற வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை அழைப்பு விடுக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்