Paristamil Navigation Paristamil advert login

'128'இல் இலங்கை...! 

'128'இல் இலங்கை...! 

21 பங்குனி 2024 வியாழன் 12:57 | பார்வைகள் : 579


உலக மகிழ்ச்சி தினம் நேற்று (20) கொண்டாடப்பட்டது. மகிழ்ச்சிக்கு எல்லாம் ஒரு தினம் கொண்டாடப்படுகிறதா என்று நாம் யோசிப்போம். ஆம், உலகம் முழுவதும் மகிழ்ச்சிக்கு என்றொரு நாள் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சி நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது, மகிழ்ச்சி என்பது நமது சிறப்புமிகு உணர்வுகளில் ஒன்று. ஆனால், இன்று இதை நம்மில் உணர்வோர் மிக குறைவாகிக்கொண்டே போகிறோம். அதற்கு மாறாக கோபம், வெறுப்பு போன்ற குணங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் மகிழ்ச்சி என்ற ஒன்றை பல மனிதர்கள் அனுபவிப்பதே இல்லை. 

மகிழ்ச்சியா அப்படியென்றால் என்ன என்று கேட்குமளவுக்கு பலரது வாழ்வில் மகிழ்ச்சி என்ற உணர்வு இல்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதனாலோ என்னவோ மகிழ்ச்சிக்கு என்றொரு தினம் கொண்டாடப்படுகிறது. 

மார்ச் 20ஆம் திகதி சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகளவில் கொண்டாடப்படுகிறது.

2013ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதியிலிருந்து ‘சர்வதேச மகிழ்ச்சி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் மார்ச் 20ஆம் திகதி மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது என்றால், அந்த நாளுக்கென ஒரு சிறப்புண்டு. இது வசந்த காலத்தின் தொடக்க நாள். அந்த நாளில் பகலும் இரவும் சரிசமமாக இருக்கும். இதனால்தான் இந்த நாளை உலகின் மகிழ்ச்சி தினமாகச் சிறப்பிக்க ஐ.நா. தேர்ந்தெடுத்தது. 

ஒவ்வோர் ஆண்டிலும் மகிழ்ச்சி தினம் தொடர்பில் ஒரு கருப்பொருள் ‍வெளியிடப்படும். அந்த வகையில் இவ்வருடம் 2024ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நாள் கருப்பொருள் ‘ஒன்றிணைந்து மகிழ்ச்சி காணல்’ ஆகும். போர் மற்றும் வறுமையை உலகளவில் முடிவுக்குக் கொண்டு வருவதே மகிழ்ச்சி என ஐ.நா. கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு  ஆண்டுதோறும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்படுவதும் வழமை. ஒவ்வொரு நாட்டிலும் தனிநபர் வருமானம், சமூக ஆதரவு, சுகாதாரம், மக்கள் தங்கள் வாழ்க்கை மீது கொண்டுள்ள திருப்தி, சமூக ஒத்துழைப்பு, வாழ்நாள், சுதந்திரம், ஊழலின்மை, தாராள மனப்பான்மை உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. ஐ.நா.வின் ஆதரவோடு ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் இந்த உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் வழமையை போல 2024ஆம் ஆண்டுக்கான பட்டியலிலும் வட ஐரோப்பிய நாடுகளே முன்னணியில் உள்ளன.

வட ஐரோப்பிய நாடுகளின் பிராந்தியம் என்பது  டென்மார்க், நோர்வே, சுவீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் பரோ, கிரீன்லாந்து ஆகிய தீவுகளை உள்ளடக்கியதாக உள்ளது. 

பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. டென்மார்க் இரண்டாம் இடத்தையும், ஐஸ்லாந்து 3ஆம் இடத்தையும் சுவீடன் 4ஆவது இடத்தையும்  பிடித்துள்ளன. இஸ்ரேல் 5ஆவது இடத்தில் இருக்கிறது.

இதில் எமது நாடான இலங்கை 128ஆவது இடத்தை பிடித்துள்ளது. எமது அண்டைய நாடான இந்தியா 126ஆவது இடத்தில் உள்ளது. மற்றும் சீனா 60ஆவது இடத்திலும், நேபாளம் 93 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 108ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 129ஆவது இடத்திலும் உள்ளன. 143 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் பிடித்துள்ளது.

அதேவேளை இந்த அறிக்கையில் முதன்முறையாக அமெரிக்காவும் ஜெர்மனியும் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 23ஆம் இடத்திலும், ஜெர்மனி 24ஆவது இடத்திலும் இருக்கின்றன.

பின்லாந்து முதல் இடத்தை பிடித்தமைக்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. அதாவது,  அந்நாட்டு மக்கள் இயற்கையுடன் நெருங்கிய பிணைப்பு கொண்டவர்களாவர். அவர்கள் வேலை வாழ்க்கை சமநிலையை அறிந்து செயல்படுகின்றனர். அதன் தாக்கம் அவர்களின் வாழ்க்கை மீதான திருப்தியில் வெளிப்படுகிறது.

அத்தோடு, பின்லாந்து மக்கள் வெற்றிகரமான வாழ்க்கை என்பதற்கான அளவுகோலை நடைமுறை யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு வகுக்கின்றனர். ஆனால் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் வெற்றிகரமான வாழ்க்கை செல்வச் செழிப்பை மட்டுமே வைத்து அளவிடப்படுகிறது.

அது மட்டுமல்லாது, அரசாங்க அமைப்புகளின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, மிகவும் குறைந்த அளவிலான ஊழல், அனைவருக்கும் இலவசமான கல்வி, சுகாதாரம், வலுவான சமூகநலக் கட்டமைப்பு ஆகியன பின்லாந்து மக்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்குக் காரணம் என கூறப்படுகிறது.

உண்மையில் இலங்கையரான நாம் ஏன்   மகிழ்ச்சி அளவுகோளில் கடைசி பகுதியில் இருக்கின்றோம் என்றால், அதற்கு பல காரணங்கள் உள்ளன. நமது நாட்டில் அன்பு என்பதே மிக குறைவாக உள்ளது. எங்கும்  இனம், மதம் ரீதியிலான வன்முறைகள், ஊழல் தலைவிரித்தாடி பொருளாதாரம் பாதாளத்தில் உள்ளது. இப்படி நாடு இருக்கும்போது மகிழ்ச்சியான பட்டியலில் இடம்பிடிப்பது கடினமே.

ஆனால், தனி நபர்களாக நாம் ஒவ்வொருவரும் நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கிய காரணங்களை செய்தால் நமக்குள் மகிழ்ச்சி பிறக்கும். மகிழ்ச்சி எல்லாவித மாற்றங்களையும் கொண்டு வரக்கூடியதாகும். எப்போதும் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பது நமது ஆயுளை கூட்டும். இதனால்தான் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள்.

அத்தோடு புன்னகை நமது சிரிப்பு மன அழுத்தத்தை குறைக்கிறது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, முகத் தசைகளை இயக்குகிறது. மூளையை புத்துணர்ச்சிப்படுத்தி ஆயுளை அதிகரிக்கிறது. இதுபோலவே மனநிலையை மகிழ்ச்சியாக பராமரிப்பதன் மூலம் சிரிப்பையும் ஆரோக்கியத்தையும் வாழ்வில் தக்க வைக்க முடியும். 

எனவே, நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் முகத்தில் புன்னகையோடு பேசும்போது, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தானாகவே துளிர்விடும். எனவே, எல்லோரிடமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம்.

மகிழ்ச்சியான வாழ்வை நோக்கி நாம் செல்ல வேண்டுமெனில், எத்தனை துன்பங்கள் வந்தாலும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சிப்போம். 

நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்