Paristamil Navigation Paristamil advert login

தொடர்வண்டியில் ஓர் அனுபவம்!

தொடர்வண்டியில் ஓர் அனுபவம்!

19 தை 2022 புதன் 12:58 | பார்வைகள் : 9923


நீல வானத்தில கோலம்போடற வெண்பஞ்சு மேகங்கள். ஆகா பாக்கத்தான் எவ்வளவு அழகு. அவை சுகமா வான வீதியில பவனி வருது. மேகங்களைப் போல எனக்கும் வானத்திலே மெதந்துகிட்டே இருக்கணும்போலத் தோணுது. அப்படீண்ணு நவீன் நெனச்சான். வெயில்ல தகதகண்ணு தங்க நெறத்தில்ல ஜொலிக்கற சூரியகாந்திப் பூக்களைப் பாத்தான் சூரியன் போற தெசயப் பாத்து முகத்த திருப்பறீங்களே அதெப்படிண்ணு கேட்டு சூரியகாந்திப் பூக்களோட பேசினான். பச்சக்கம்பளம் விரிச்சது மாதிரித் தெரிந்த நெல் வயல்களப் பாத்தான் அதுக்குமேல உருண்டு வௌயாடணும்ணு நெனச்சான்.

 
ரயில் தடதடணு தாளம்போட்டு தண்ட வாளத்திலே போய்ட்டிருந்திச்சு. மரமும் செடியும் வீடும் எல்லாம் பின்னாடி பாத்து ஓடறமாதிரியிருந்திச்சு. அப்ப பட்ணு என்னமோ அவனோட மொகத்தில வந்து விழுந்திச்சு. நல்ல வேளயா அவன் கண்ண மூடிட்டான். இல்லாட்டி கண்ணுக்குள்ள விழுந்திருக்கும். ச்சே யார் இப்படி செய்யறது மொகத்தில விழுந்தது என்னண்ணு கீழே பாத்தான் ஆனா அவனாலெ கண்டுபிடிக்க முடியலெ.
 
கைகுட்டைய எடுத்து முகதக்தை தொடச்சுகிட்டான். அடுத்தமுறை விழுந்தா என்னண்ணு பாத்தரணும்ணு காத்திருந்தான். கொஞ்ச நேரமாச்சு ரயில் பாதைக்கு ரெண்டு பக்கமும் நெலம் ஈரமாகக் கெடந்திச்சு. நவீன் ஜன்னல் வழியா வெளியே தெரிஞ்ச காட்சிகளைப் பாத்திட்டிருந்தான். இருந்தாலும் ஏதாவது முகத்தில வந்து விழுதாண்ணு கவனிச்சிட்டுமிருந்தான்.
 
அப்போ முன்பக்கத்து ஜன்னலிலிருந்து ஒரு கை வெளியே நீண்டுது. உள்ளங்கைக்குள்ளே ஏதோ ஒரு பொருளை மறைச்சு வைச்சிருக்கிற மாதிரி கையை சுருட்டி வச்சிருந்தாங்க. அப்புறம் சட்டுனு உள்ளங்கையை விரிச்சு கையிலிருக்கற பொருள வீசினாங்க. நவீன் கூர்ந்து பாத்தான். ஆன வண்டி போற வேகத்திலெ அது என்னதுண்ணு கண்டுபிடிக்க முடியலெ.
 
யாரு வீசறா, என்னத்த வீசறாங்க எதுக்காக இப்படி வீசறாங்க.. இதுக்கெல்லாம் விடை தெரியாட்ட தலையே வெடிச்சிடும் போலிருந்தது நவீனுக்கு. அவன் எடத்த விட்டு எந்திரிச்சான். ரயில் பெட்டியோட அடுத்த அறைக்குப் போனான்.
 
அங்க ஜன்னலோரமா ஒரு வயசான அம்மா உட்காந்திருந்தாங்க. அவங்க மடியில ஒரு கைப்பை இருந்திச்சு. அது திறந்தே இருந்திச்சு. அப்ப அவங்கதான் அந்தப் பொருள வீசனவங்க. நவீன் அவங்க பக்கத்திலெ போய் உக்காந்தான்.
 
"நான் உங்கள ஒண்ணு கேட்கட்டுமா? " அப்படீண்ணு கேட்டான். "நீ என்ன கேட்கப்போறேண்ணு எனக்குத் தெரியும். நான் வீசினது உன் முகத்தில பட்டுச்சா" அப்படீண்ணு கேட்டாங்க. நவீன் ஆமாண்ணு தலயாட்டினான். "அது வேறொண்ணுமில்ல பூச்செடிகளோட விதைக"
"விதைகளா எதுக்கு அப்படி விதைகள வீசறீங்க? " நவீன் ஆர்வமாக் கேட்டான்.
 
"வண்டி ஓடும்போது நீ வெளியே வேடிக்கை பாப்பயா? "
"ஆமாம்"
 
"வெளியே தெரிகிற காட்சிகளையெல்லாம் பாப்பயா"
"அப்புறம் பாக்காம, பாக்க பாக்க நல்லாயிருக்குமே"
 
"அப்படி பாக்கும்போது உனக்கு சந்தோஷமா இருக்கா"
"பின்ன காட்சிகளைப் பாத்து சந்தோஷப்படாதவங்க கல்நெஞ்சக்காரர்களாத்தான் இருப்பாங்க"
 
"ஆம் சரியாச் சொன்னே... நம்மள்ல பல பேர் அப்படித்தான் இருக்காங்க. சரி அது போகட்டும் யாராவது உன்னை சந்தோஷப்பட வச்சா அவங்களுக்கு நன்றி சொல்ல வேண்டாமா? இப்ப இந்த இயற்கை உனக்குச் சந்தோஷம் தந்திச்சில்ல அதுக்கு எப்படி நன்றி சொல்லுவே. நான் எப்படி நன்றி சொல்றேண்ணா இந்தப் பூவிதைகளைத் தூவி நன்றி சொல்றேன். நெறயத் தூவுவேன் சிலது மொளைக்கும். செலது மொளக்காது. நாளைக்கு இதே பாதையில போற உன்ன மாதிரிக் கொழந்தைகளப் பாத்து அந்த்ப் பூக்கள் சிரிக்குமில்லையா? அதுபோதும் எனக்கு" அப்படீண்ணு அந்தம்மா சொன்னாங்க.
 
நவீனுக்கு அந்த அம்மாவைச் சந்திச்சதில பெருமையா இருந்திச்சு. இயற்கைக்கு நன்றி சொல்ல இது எவ்வளவு அழகான வழி... அவன் நெனச்சான்.
 
"நானும் இயற்கைக்கு நன்றி சொல்லுவேன். அதுக்கொரு நல்ல வழியைத் தேர்ந்தெடுப்பேன்" அப்படீண்ணு சொன்னான். "ரொம்ப நல்லது உன்ன மாதிரி நல்ல பையனுகளெல்லாம் இயற்கைக்கு நன்றி சொல்லத் தொடங்கீட்டு நம்ம பூமி ரொம்ப ரொம்ப அழகான பூமியா மாறிரும்" அப்படீண்ணு அவங்க சிரிச்சுகிட்டே சொன்னாங்க.
 
நவீன் என்ன செஞ்சான் தெரியுமா?
 
அவன் வீட்டிலே ஒரு பெரிய பூந்தோட்டம் அமைச்சான். தன்னோட நண்பர்கள் கிட்டே சொல்லி அவங்கவங்க வீடுகள்ல பூந்தோட்டம் வக்கிறதுக்கு உதவி செஞ்சான்.
 
நெறைய மரக்கன்றுகள மொளக்க வைச்சு பொதுஇடங்கள்ல நட்டான். ஆமா நீங்களும் வண்டியிலெ போயிருப்பீங்களே. .. வெளியே தெரியற காட்சிகளைப் பாத்து சந்தோஷப்பட்டிருப்பீங்களே... நீங்க எப்படி இயற்கைக்கு நன்றி சொல்லப் போறீங்க?

வர்த்தக‌ விளம்பரங்கள்