Paristamil Navigation Paristamil advert login

என்றும் அழியாதது...!!

என்றும் அழியாதது...!!

10 தை 2022 திங்கள் 18:13 | பார்வைகள் : 10481


காட்டுத் தீ போல ஊரெங்கும் அந்தச் செய்தி பரவிச்சு. செய்தியைக் கேட்டவங்க செஞ்சுகிட்டிருந்த வேலையை அப்படியே நிறுத்திவிட்டு ஊர் எல்லைக்கு ஓடினாங்க.

 
பல்லுப்போன பாட்டி முதல் பல்லில்லாத பாப்பா வரை, தள்ளாடும் கிழவர் முதல் துள்ளி விளையாடும் பிள்ளைகள் வரை ஊர் எல்லைக்கு ஓட்டமும் நடையுமாக போய்க்கிட்டிருந்தாங்க. அப்படி ஊரையே கட்டிப் போட்ட அந்தச் செய்தி என்ன சேதி.
 
"ஒரு முனிவர் வந்திருக்கிறராம்.... அவர் பெரிய அறிஞராம். அவர் பார்வை பட்டாலே போதும் மனக்கவலை மறைந்துடுமாம்." அரசர்கள் முதல் ஆண்டிகள் வரை, படித்தவர் முதல் பாமரர் வரை அந்த முனிவரது கால்களில் விழுந்து வணங்கியிருக்காங்களாம். அவர் நம் ஊருக்கு வந்திருக்கறது நம்ம நல்ல நேரம். வாங்க வாங்க அவரை வணங்கலாம்...'' அப்படிங்கறதுதான் அந்தச் சேதி.
 
அந்த ஊரில் பெரியசாமிணு ஒருத்தர் இருக்காரு. அவர் ஒரு சின்னக் குடிசையில் வாழ்ந்து வந்தார்.
 
உடுத்திக்கிறதுக்கு ஒண்ணு மாத்திறக்குதுக்கு ஒண்ணு அப்படீண்ணு ரெண்டே ரெண்டு ஆடைகதான் அவருக்கு இருக்கு. தலைக்குத் தலையணை இல்லை போத்திக்கறதுக்குப் போர்வையில்லை. கிழிந்த பாய் ஒண்ணை தரையில் விரிச்சுப் படுத்துக்குவார்.
 
நாம மூணு வேளை சாப்பிடுவோம் அவர் மூணு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடுவார். அவ்வளவு எளிமையா வாழ்ந்து வந்தார்.
 
"நீங்கள் எதுக்காக இப்படி உங்களையே கஷ்டப்படுத்துக்கிட்டு வாழறீங்கண்ணு யாராவது கேட்டா போதும் கேட்டவங்க கிட்ட தன்னோட மனசில உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துடுவார்.
 
"நீங்கள் இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி வச்சிருக்கீங்களே. சில வருஷங்களில் அது அழிஞ்சுடுமே நீங்கள் வாங்கி வச்சிருக்கீங்களே காரு பைக்கு கம்ப்யூட்டரு செல்போனு எல்லாம் அழிஞ்சு போகுமே. நீங்கள் இந்த மண்ணை விட்டு மறஞ்சா எல்லாமும் மறஞ்சுடுமே. அழியாதது அப்படீண்ணு ஏதாச்சு உண்டா? '' என்று கேள்வி கேட்டவங்ககிட்டே எதிர்க்கேள்வி கேட்பாரு.
 
ஊர் மக்கள் கூடச் சேந்து பெரியசாமியும் அந்த முனிவரப் பாக்க ஊர் எல்லைக்குப் புறப்பட்டார். அந்த முனிவர்கிட்டப் போனாரு. அந்த முனிவரும் பெரியசாமியைப் பார்த்துச் சிரிச்சாரு.
 
" ஐயா... முனிவரே... இந்த உலகில என்னைக்கும் அழியாமல்,  நிலையாக நிக்கக் கூடிய ஒண்ணை உங்களால தரமுடியுமாண்ணு கேட்டாரு.
 
அதைக் கேட்ட முனிவரும் "ஓ தரலாமே...''  அப்படீண்ணு சொல்லீட்டு தன்னோட தோளில் கிடந்த சின்ன பைக்குள் கையை விட்டார். எதையோ எடுத்து காகித்தில் பொதிஞ்சு பொட்டலமாக்கிக் கொடுத்தார்.
 
பெரியசாமிக்கு ஒரே ஏமாற்றமாகப் போச்சு. நான் அழியாத ஒரு பொருளைக் கேட்க இந்த முனிவர் ஒரு சிறிய காகிதப் பொட்டலத்தைத் தர்றாரேணு நெனச்சாரு. இருந்தாலும் தன்னோட நெனப்பை வெளியே காட்டிக்காம இருந்தாரு.
 
பெரியசாமி தன் குடிசைக்குத் திரும்பி வந்நதாரு. பொட்டலத்தைத் திறந்து கூடப் பாக்காம தன்னோட குடிசையோட கூரைக்குள் சொருகி வச்சாரு.
 
நாட்கள் உருண்டோடிச்சு. நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் ஆண்டுகளாச்சு.
 
பெரியசாமி இறந்து போனார். காத்திலும் மழையிலும் பட்டு அவர் தங்கியிருந்த குடிசையும் விழுந்திச்சு. கரையான் திண்ணு மண்ணோடு மண்ணாப்போனது. ஆனால் கூரைக்குள் சொருகி வைத்த பொட்டலம் மண்ணா மாறல... அதுக்குள்ள என்ன இருந்திச்சு தெரியுமா?
 
பல்வேறு வகை விதைகள்...
 
விதைகள் மண்ணில் விழுந்து மொளச்சுது
 
சின்ன தையாயிருந்தது வளர்ந்து பெரிய மரங்களாச்சு. மரங்களில் பூக்கள் வந்திச்சு. பூக்கள் காய்களாகவும், காய்கள் கனிகளாகவும் மாறிச்சு.
 
பழ மரத்தை நாடி பறவைகள் வந்திச்சு. விலங்குகளும் வந்திச்சு. பழங்களை எடுத்திட்டு நாலா பக்கமும் போச்சு. பழத்தை திண்ணுட்டு விதைகள அங்கங்க போட்டுச்சு.. எங்கெல்லாம் விதைகள் விழுந்திச்சோ அங்கெல்லாம் புதிய மரங்கள் உருவாச்சு
 
பெரியசாமி கேட்டது நடந்துட்டுது இல்லையா? என்னைக்கும் அழியாதது. யாராலும் அழிக்க முடியாதது.... அதுமாதிரி நடந்திருச்சே..
 
ஆனால் அதைப் பாக்கறதுக்குப் பெரியசாமிதான் ஊயிரோட இல்ல.

வர்த்தக‌ விளம்பரங்கள்