Paristamil Navigation Paristamil advert login

விவாகரத்தும்... வில்லங்க வாழ்க்கையும்....

விவாகரத்தும்... வில்லங்க வாழ்க்கையும்....

17 வைகாசி 2013 வெள்ளி 10:27 | பார்வைகள் : 9221


 இப்பொழுது விவாகரத்து அதிகரித்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் விவாகரத்துக்கு பெண் ஆண் மீதும், ஆண் பெண் மீதும் போடும் காரணமில்லாத குற்றச்சாட்டு தான். இப்படி பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் வாதத்திற்காக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்! 

 
ஒரு பெண் ஒழுக்கமானவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆண், அதே ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மனைவியின் நடத்தையில் அவமானப்படும் ஆண், அதேபோல மனைவியும் தன் நடத்தையில் அவமானப்படுவாள், வேதனைப்படுவாள் என்ற உண்மையை உணர வேண்டும். ஒழுக்கம் என்பது இருவருக்கும் பொதுவானது. 
 
கணவன், மனைவி இருவரும் சேர்ந்துதான் திருமண பந்தத்தை காப்பாற்ற வேண்டும். அதில் ஒருவர் மட்டுமே நேர்மையாக வாழ்ந்து மற்றவர் நம்பிக்கை துரோகம் செய்வது நியாயமாகாது. நம் சமுதாயத்தில் ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட விதி. ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். 
 
மனைவிக்கு கணவன் செய்யும் துரோகம் இயல்பானது. அதே துரோகத்தை மனைவி செய்தால் நடத்தை கெட்டவள் என்று சொல்கிறார்கள். இது காலகாலமாக நடந்து வரும் வழக்கம். இது ஆண் ஆதிக்கத்தின் பிரதிபலிப்பு. தான் செய்யும்   தவறுகளை மனைவி கண்டு கொள்ளாமல் விட்டுவிட வேண்டும். அப்படியே தெரிந்து விட்டாலும் மன்னித்து விட வேண்டும். 
 
ஒரு ஆண் திருமண பந்தத்தை மீறி ஒழுக்கக் கேடாக நடப்பதற்கு பல காரணங்களை சொல்வார். குறிப்பாக மனைவி சரியில்லை என்று சொல்வார். ஆனால் அதே காரணத்தை ஒரு மனைவி சொன்னால் சமூகம் ஏற்காது. திருமண உறவு என்பது நம் நாட்டைப் பொறுத்தவரையில் மரியாதைக்குரியது. 
 
அதை இருவரும் மாறி மாறி கேலிக்குரியதாக்குவது திருமண பந்தத்தையே திகைக்க வைத்துவிடும். இன்று சாதாரண காரணங்களுக்காக திருமண உறவுகளை முறித்துக் கொள்கிறார்கள். அந்த உறவுகளை, எத்தனை லட்சங்கள் செலவிட்டாலும் மீண்டும் இணைக்க முடியாது. திருமண பந்தத்தில் கிடைக்கும் பாதுகாப்பு, எதிர்காலம் இதெல்லாம் தாறுமாறான பந்தங்களால் கிடைக்காது. 
 
இதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். தவறான ஆண்களை இந்த சமூகம் நிறைய பார்த்திருக்கிறது. தவறான பெண்களை சமூகத்தால் ஜீரணிக்க முடியாது. காரணம் பெண்களை எப்போதும் தெய்வங்களாகவும், நல்லவர்களாகவும் பார்த்துப் பழக்கப்பட்டு விட்டது இந்த சமூகம். இதனால் ஆண்களை திருத்த பெண்கள் படுகுழியில் விழவேண்டிய அவசியமில்லை. 
 
கற்பு என்பது இருவருக்கும் பொதுவான ஒன்று என்ற கருத்தையே இன்றளவில் ஏற்க மறுக்கும் ஆண்வர்க்கம் தன்னுடைய புத்திசாலித்தனத்தை பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பெண்களை ஏமாற்றுவதிலேயே செலவிடுகிறது. திருமணம் எனும் புனிதமான பந்தத்தை காப்பாற்றும் கடமை நமக்கும் இருக்கிறது என்ற உணர்வு ஆண்களுக்கும் வர வேண்டும். 
 
வந்தால், விவாகரத்துகள் அதிகரிக்காது. விவாகரத்து என்பது ஒரு சாபக்கேடான விஷயம். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சமூகத்தின் பார்வையிலிருந்து அவர்களை கீழிறக்கும் விஷயம். அதனால் விவாகரத்து செய்வதை பெரிய சாதனையாக நினைக்காமல் கூடுமானவரை அதை தவிர்ப்பதே நல்லது. பண்பு தவறிய மனித வாழ்க்கை ஒருபோதும் நிம்மதியைத்தராது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்