Paristamil Navigation Paristamil advert login

என் தாய்க்காக..

என் தாய்க்காக..

10 வைகாசி 2012 வியாழன் 13:45 | பார்வைகள் : 9577


 

பத்து திங்கள் உன் திருவறையில்
என்னை கட்டி காத்தாயே
எட்டி உதைத்தேனா
என் தாயே சொல்லிவிடு

வைர கல்லொன்று வந்துவிட்டதென்று
வாய் மலர்ந்த புன்னகையில்
தூக்கம் கெட்டு நீ
எத்தனை நாள் விழித்திருந்தாய் ?

புத்தம் புது ரோஜாவாய்
நான் வந்த போதினிலே
புன்னகை நீ புரிந்தாயா
மெய் மறந்தே நின்றாயா

என் தந்தை உன்னருகே
அமர்ந்தே இருந்தாரா
ஆசை முத்தங்கள்
அள்ளி தந்தாரா

அழகாக தொட்டிலிட்டு
ஆராரோ பாடினாயா
நிலா சோறூட்டி
கதைகள் சொன்னாயா

தத்தி தடுமாறி
தளிர் நடை பயிலையிலே
தாவி பிடித்தாயா
தழுவி நின்றாயா

சொல்லெணா சேட்டைகள்
நான் செய்து விட்டேனா
சிறு குச்சி கொண்டு
அடி நீ போட்டாயா

பாலர் பருவத்தில்
பள்ளி சென்றேனா - இல்லை
பதுங்கி பதுங்கி நான்
ஒழிந்தே திரிந்தேனா
பாச முத்தங்கள்
இனிப்பு பண்டங்கள்
தந்தே நீ அனுப்பி வைத்தாயா

ஏராளம் கேள்விகள்
என்மனதில் ஓடுதிங்கே
உன்னருகில் வந்துவிட
உள்ளமது துடிக்குதிங்கே

உன் பவள கை பட்டு
ஒரு முத்தம் கேட்குதம்மா
அன்பான ஒரு வார்த்தை
அழகான ஒரு சிரிப்பு
கனிவான ஒரு பார்வை
கண்டு விட ஏங்குதம்மா

காலங்கள் கடந்தாலும்
தேசங்கள் பிரிந்தாலும்
நினையாத நேரமில்லை
என்னுயிரை தந்தவளே

இயல்பான வாழ்க்கையில்
இயந்திர ஓட்டத்தில்
தவியாத காலமில்லை தாயே
உன்னை சேரவில்லை

ஆயிரம் எண்ணங்கள்
என்னுள்ளில் என் தாயே
எப்போது வந்திடுவாய்
என் துயர் தீர்த்திடுவாய்
தவிக்கின்றேன் பலநாளாய்
தந்திடுவாய் ஒரு பார்வை .....

வர்த்தக‌ விளம்பரங்கள்