’இந்தியன்2’ படத்திற்கு இசையமைக்க அனிருத்தை தேர்வு செய்தததற்கு காரணம் என்ன ?
24 வைகாசி 2024 வெள்ளி 12:13 | பார்வைகள் : 1842
இந்தியன்2’ படத்திற்கு இசையமைக்க ரஹ்மானைத் தேர்வு செய்யாமல் அனிருத்தை தேர்வு செய்தததற்கு காரணம் என்ன என்று பாடலாசிரியர் பா. விஜய் பேசியுள்ளார்.
ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘இந்தியன்2’. படம் வெளியாகி சமீபத்தில் 28 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதன் இரண்டாம் பாகமும் வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் அமைந்த ஷங்கர்- கமல்ஹாசன் - சுஜாதா- ரஹ்மான் கூட்டணி ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக அமைந்தது.
ஆனால், இரண்டாம் பாகத்தில் ஷங்கர்- கமல்ஹாசன் மட்டுமே தொடர்கின்றனர். முதல் பாகத்தில் இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு பதிலாக வெளிவர இருக்கும் இரண்டாம் பாகத்தில் அனிருத் இசையமைக்கிறார். அனிருத் இசையில் முதல் பாடலான ‘பாரா’ வெளியாகியுள்ளது. பாடல் ஓகே ரகமாக அமைந்த நிலையில், ரஹ்மானை மிஸ் செய்வதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
அனிருத்துக்குப் பதிலாக ரஹ்மானையே இசையமைக்க வைத்திருக்கலாம் என்றும் ‘இந்தியன்’ படத்தின் ‘கப்பலேறி போயாச்சு...’ பாடலுக்கு இணையாக ‘பாரா...’ வரவில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் முதல் சிங்கிள் வெளியான முதல் நாளிலேயே பத்து மில்லியனுக்கும் அதிகமாக பார்வையாளர்களைக் குவித்து அந்த பாடல் ட்ரெண்டாகும்.
ஆனால், ‘பாரா...’ பாடல் வெளியான முதல் நாளே 3 மில்லியன் வியூஸ்களை நெருங்கவே சிரமப்பட்டிருக்கிறது. இதற்கும் அனிருத்தின் சுமாரான இசை காரணம் என்று சொல்லி வருகின்றனர்.
யூ - ட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பாடலாசிரியர் பா. விஜய், இது குறித்து பேசிய போது, “ ’இந்தியன்2’ படம் தொடங்கப்பட்டபோது அனிருத் உச்சத்தில் இருந்தார். அதனால், இந்தத் தலைமுறை இளைஞர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே ஷங்கர் அவரைத் தேர்வு செய்தார். சமீபத்தில் வெளிவந்த பெரிய படங்களில் இவரது இசை பெரிய ஹிட். அதுபோலவே, ‘இந்தியன்2’ படத்திற்கும் அவரது இசை பக்கபலம்” என்று கூறியிருக்கிறார்.