Paristamil Navigation Paristamil advert login

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்..

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்..

22 ஆனி 2024 சனி 09:18 | பார்வைகள் : 5161


இன்று தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்றாலும் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட துக்க சம்பவம் காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும் முடிந்தால் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்றும் சமீபத்தில் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால் இந்த அறிக்கையை பொருட்படுத்தாமல் பல விஜய் ரசிகர்கள் இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர் என்பதும் அவரது ரீ ரிலீஸ் படங்களை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் விபரீதம் ஏற்பட்டுள்ளது. இந்த சாகச நிகழ்ச்சியில் ஒரு சிறுவனின் கைகளில் தீயை பற்ற வைத்து ஓடுகளை உடைக்க முற்பட்டபோது சிறுவனின் கை முழுவதும் திடீரென தீ பரவியது.

அந்த தீயை அணைக்க முற்பட்டவர் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோல் சிந்தியதால் அந்த பகுதி முழுவதும் தீ பரவியது. இந்த சம்பவத்தில் சிறுவன் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் அறிவுறுத்தியும் இதுபோன்ற சாகசங்கள் நிகழ்த்தி விபரீதத்தை ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்