கூலி படத்தால் தாமதமாகுமா கைதி 2?
4 ஐப்பசி 2024 வெள்ளி 09:44 | பார்வைகள் : 938
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான நெல்சன் திலீப் குமாரின் "ஜெயிலர்" திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் அடுத்தபடியாக ஞானவேல் இயக்கத்தில் "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், தற்பொழுது தனது அடுத்த திரைப்பட பணிகளிலும் பயணித்து வருகிறார். "வேட்டையன்" திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியூரில் லோகேஷ் கனகராஜின் "கூலி" திரைப்பட பணிகளில் பிஸியாக நடித்து வந்த ரஜினிகாந்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி உடல் நல குறைவு ஏற்பட்டது. அவருடைய இருதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் சிறிய வீக்கம் இருந்த நிலையில், அதற்கான சிகிச்சைகள் செய்யப்பட்டு தற்பொழுது நல்ல ஓய்வில் அவர் இறந்து வருகிறார். விரைவில் அவர் வீடு திரும்பவுள்ள நிலையில், சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு தான், அவர் தனது "கூலி" திரைப்பட பணிகளை துவங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், கூலி திரைப்பட பணிகளை முடித்தவுடன், அடுத்த படியாக தனது கைதி 2 பணிகளை துவங்குவதாக இருந்தார். ஆனால் தற்பொழுது ரஜினிகாந்தின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கூலி திரைப்படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட்டு, தன்னுடைய கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அவரால் செல்ல முடியுமா? என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது. கைதி திரைப்படம் தான் லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்சில் முதல் முதலில் வெளியான திரைப்படம்.
இந்நிலையில் ஏற்கனவே தனது "மெய்யழகன்" திரைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகர் கார்த்தி, கைதி 2, சர்தார் 2, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் தற்போது சென்சேஷனல் இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.