அதிகமாக கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதால் புற்றுநோய் வருமா?
7 புரட்டாசி 2024 சனி 15:17 | பார்வைகள் : 695
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்களின் பெரும்பாலான நேரத்தை மொபைல் பயன்படுத்துவதிலேயே செலவிடுகிறார்கள். இருப்பினும் அளவுக்கு அதிகமாக மொபைலை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
அதிக நேரம் மொபைல்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை பற்றி நாம் அனைவரும் அடிக்கடி கேள்விபட்டிருப்போம். மொபைல் போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மொபைல் போன்களின் அதிக பயன்பாடு மூளை புற்றுநோய் ஏற்படும் அல்லது மூளை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும் என்று பலரும் கூறுவதை கேட்டிருப்போம்.
ஆனால் கையடக்க தொலைபேசிகளான மொபைல்களை பயன்படுத்துவதால் மூளை புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் தனது ஆய்வில் இதை வெளிப்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் புதிய மதிப்பாய்வானது உலகம் முழுவதிலும் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டது. இதன் போது வயர்லெஸ் தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் மூளை புற்றுநோய் பாதிப்புகளில் அதிகரிப்பு இல்லை என்று முடிவு செய்து இருக்கிறது.
Environment International என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவு அடிக்கடி நீண்ட நேரம் மொபைல் கால் பேசுபவர்களுக்கு அல்லது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு நிம்மதி தரும் வகையில் உள்ளது. WHO-வின் இந்த சமீபத்திய ஆய்வானது 1994 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட சுமார் 63 ஆய்வுகளை ஆய்வு செய்தது.
ஆஸ்திரேலியாவின் கதிர்வீச்சு பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதிகள் உட்பட, 10 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 நிபுணர்கள் இந்த ஆய்வு குழுவில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் நடத்திய இந்த ஆய்வில் மொபைல் போன்களில் மட்டுமல்ல, தொலைக்காட்சிகள், பேபி மானிட்டர்ஸ் மற்றும் ரேடார் போன்ற சாதனங்களிலும் பயன்படுத்தப்படும் ரேடியோ ஃப்ரீக்வென்ஸி ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
WHO-வின் இந்த விரிவான மதிப்பாய்வின்படி, மொபைல் போனை எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும், அதற்கும் மூளைப் புற்றுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. பல ஆண்டுகளாக மொபைல் பயன்பாடு இருந்தபோதிலும், க்ளியோமா மற்றும் salivary gland tumors (மூளை புற்றுநோய்க்கான காரணங்கள்) போன்ற கேன்சர் அபாயத்தில் அதிகரிப்பு இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளவரும், இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான மார்க் எல்வுட்டின் கூற்றுப்படி, ஆய்வு செய்யப்பட்ட முக்கிய விஷயங்கள் எதுவும் புற்றுநோய் அபாயத்தைக் காட்டவில்லை. இந்த மதிப்பாய்வு பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் மூளையை பாதிக்கும், அத்துடன் பிட்யூட்டரி சுரப்பி, உமிழ்நீர் சுரப்பிகள் மற்றும் லுகேமியாவின் புற்றுநோய்கள் உட்பட பல வகை புற்றுநோய்களை ஆய்வு செய்தது. மொபைல் ஃபோன் பயன்பாடு, பேஸ் ஸ்டேஷன்கள், டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் பணிச்சூழலில் ரேடியோ ஃப்ரீக்வென்ஸியில் வெளிப்படுதல் போன்ற சாத்தியமான அபாயங்களையும் இது ஆய்வு செய்தது.
எனினும் மற்ற வகை புற்றுநோய்கள் தொடர்பான கண்டுபிடிப்புகள் பின்னர் தனித்தனியாக அறிவிக்கப்படும். ஒட்டுமொத்தமாக ஆய்வு முடிவுகள் மிகவும் நம்பிக்கையளிக்கின்றன. மொபைல் போன்கள் சர்வதேச பாதுகாப்பு வரம்புகளுக்குக் கீழே குறைந்த அளவிலான ரேடியோ அலைகளையே வெளியிடுகின்றன, மேலும் இவை மனித ஆரோக்கியத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
இந்த மதிப்பாய்வு முடிவானது முந்தைய ஆராய்ச்சியுடன் ஒத்துப்போகிறது. WHO மற்றும் பிற சர்வதேச சுகாதார நிறுவனங்கள், மொபைல் போன் கதிர்வீச்சை சுகாதார பிரச்சனைகளுடன் இணைக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியிருந்தாலும், மேலதிக தகவல்களுக்கு இன்னும் ஆராய்ச்சி தேவை என்று பரிந்துரைத்துள்ளனர்.
தற்போது மொபைல் போன் கதிர்வீச்சை “புற்றுநோயை உண்டாக்கும்” அல்லது கிளாஸ்2B என IARC வகைப்படுத்துகிறது, அதாவது கேன்சர் ஏற்படுத்தற்கான சாத்தியமான தொடர்பை முழுமையாக நிராகரிக்க முடியாது. எனினும் 2011-ல் IARC-ன் கடைசி மதிப்பீட்டிற்குப் பிறகு கிடைத்துள்ள சில புதிய தரவுகளின் காரணமாக, இந்த வகைப்பாட்டை மறுமதிப்பீடு செய்ய ஏஜென்சியின் ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து WHO அதன் மேம்படுத்தப்பட்ட மதிப்பீட்டை அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.