மணிப்பூரில் மீண்டும்! கலவரம்: 6 பேர் பலி
8 புரட்டாசி 2024 ஞாயிறு 02:28 | பார்வைகள் : 979
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. நேற்று காலை நடந்த தாக்குதலில், ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக, ஆயுதமேந்திய நபர்கள் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு இட ஒதுக்கீடு தொடர்பாக, கூகி - மெய்டி பிரிவினரிடையே, 2023 மே மாதம் மோதல் வெடித்தது.
வன்முறை
இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், மணிப்பூரில் இயல்புநிலை திரும்பி வந்தாலும், அவ்வப்போது சில இடங்களில் சிறிய அளவில் வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன.
பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ராங் நகரில் ராக்கெட் வாயிலாக, கூகி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்கள் சமீபத்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், மெய்டி சமூகத்தைச் சேர்ந்த முதியவர் உட்பட இருவர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று காலை மீண்டும் வன்முறை வெடித்தது.
ஜிரிபாம் மாவட்டத்தின் நுங்சாப்பி என்ற கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் புகுந்த ஆயுதமேந்திய நபர்கள், அங்கு துாங்கிக் கொண்டிருந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலை, கூகி சமூகத்தின் ஆயுதமேந்திய குழு நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ஜிரிபாம் மாவட்ட தலைமையகத்தில் இருந்து, 7 கி.மீ., தொலைவில், மலைப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் கூகி சமூகத்தின் ஆயுதமேந்திய குழுவுக்கும், மெய்டி சமூகத்தின் ஆயுதமேந்திய குழுவுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.<br>