ஒற்றை கேள்வியால் சட்டென முகம் மாறிய உதயநிதி!
9 புரட்டாசி 2024 திங்கள் 16:48 | பார்வைகள் : 1103
எங்கிட்ட ஏன் கேட்கிறீங்க? நடிகர் விஜய்யிடமே கேளுங்க' என்று த.வெ.க., மாநாடு குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டென்ஷனாக பதில் அளித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த உச்சப்பட்டியைச் சேர்ந்தவர் மனோஜ். மாற்றுத்திறனாளி சர்வதேச தடகள வீரரான அவர் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்தவர். அவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக மதுரை வந்துள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, மாற்றுத்திறனாளி வீரர் மனோஜை சந்தித்து திருமண வாழ்த்துக் கூறினார்.
உதயநிதி வந்திருப்பதை அறிந்த ஏராளமான நிருபர்கள் அங்கு திரண்டனர். மனோஜை வாழ்த்திவிட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது தமிழக வெற்றிக்கழகம் பற்றியும், நடிகர் விஜய் அரசியல் மாநாடு குறித்தும் கேள்விகள் கேட்டனர்.
அவர்களில் ஒரு நிருபர், த.வெ.க., மாநாட்டுக்கு தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கோபம் அடைந்தார்.
ஒரு விநாடியில் சட்டென்று முகம் மாறிய அவர், 'என்ன எதிர்ப்பு தெரிவிச்சாங்க, நீங்க முதல்ல இந்த கேள்வியை அவரிடம் (நடிகர் விஜய்) கேளுங்க. அவர்கிட்ட கேட்கவேண்டிய கேள்வியை எல்லாம் என்கிட்ட கேட்குகிறீங்க? அவர்கிட்ட கேளுங்க, என்ன எதிர்ப்பு' என்று டென்ஷனாக பதிலளித்தார்.