70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு
12 புரட்டாசி 2024 வியாழன் 03:19 | பார்வைகள் : 884
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, 2018 செப்டம்பரில், பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம். இதுவரை, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், இத்திட்டத்தில் மக்கள் பயனடைந்துள்ளனர்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும்' என, கடந்த ஏப்ரலில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், டில்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மருத்துவக் காப்பீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், 6 கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும். சமூக- - பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர், இத்திட்டத்தின் பலன்களை பெறுவர். தகுதியான மூத்த குடிமக்களுக்கு புதிய தனித்துவமான ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்படும்.
ஏற்கனவே, இத்திட்டத்தில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர், தங்களுக்கென தனியாக, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை, கூடுதலாக பெறுவர்.
மத்திய அரசின் பிற சுகாதாரத் திட்டங்களில் பலன்களை பெறும் மூத்த குடிமக்கள், ஏற்கனவே உள்ள திட்டத்தில் தொடரலாம் அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணையலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.