என் வழக்கில் நானே வாதாடுவேன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்ற மகாவிஷ்ணு
12 புரட்டாசி 2024 வியாழன் 03:25 | பார்வைகள் : 1042
என் வழக்கில் நானே வாதாடுவேன்' என, ஜாமின் மனுவை, ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாபஸ் பெற்றுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, 30. அவர், சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியிலும், அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், ஆற்றிய சொற்பொழிவுகள் சர்ச்சைக்குரியதாக அமைந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணை
இது தொடர்பாக, ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை, சைதாப்பேட்டை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். அவரை, ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேபோல, ஜாமின் கோரி, மகாவிஷ்ணு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் சுப்பிரமணியம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ''என் வழக்கில் நானே வாதாடிக் கொள்கிறேன்,'' எனக் கூறிய மகாவிஷ்ணு, ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார்.
கேள்வி
இதையடுத்து, போலீஸ் காவல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, 'மகாவிஷ்ணுவிடம் ஏற்கனவே விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளீர்கள்; அதன் பிறகும் ஏழு நாள் காவலில் விசாரணை கோருவது ஏன்?' என, மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பினர்.
அப்போது, 'மகாவிஷ்ணுவின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என அறிய வேண்டும். திருப்பூரில் உள்ள, அவரின் பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவதால், அவரின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்ய வேண்டும்' என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, மகாவிஷ்ணுவிடம், போலீஸ் காவல் விசாரணைக்கு சம்மதமா என, மாஜிஸ்திரேட் கேட்டார். அதற்கு அவர், 'எனக்கு எவ்வித ஆட்பேசனையும் இல்லை' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட், மகாவிஷ்ணுவை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.