அதிகாலை எழுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..?
13 புரட்டாசி 2024 வெள்ளி 13:43 | பார்வைகள் : 881
காலைப் பொழுது என்பது நம்மில் பலரும் தவிர்த்து வருவது. இரவில் நேரத்தை போக்கி தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பது உடலுக்கும், மனதிற்கும் நிம்மதியை தராது. மாறாக காலையில் எழுந்திருப்பது உடலுக்கும், மனதிற்கும் ஒருவித புத்துணர்ச்சியை தருகிறது. அதிகாலை சீக்கிரம் எழுந்திருப்பதால் சிறந்த தூக்கம், சிறப்பான நேரத்தை செலவிடல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. காலை வேலையைப் பார்ப்பதால், புத்துணர்ச்சி கிடைக்கிறது. அவசர கதியாக செய்யப்படும் வேலைகளை நிதானமாக செய்ய முடியும்.
காலைப் பொழுதை எப்போதுமே மெல்ல மெல்ல ரசித்து அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும். ஒவ்வொரும் தங்களது வேலையை வைத்தே அன்றைய நாளைத் தீர்மானிக்கின்றனர். அது ஒரு சமயம் நிதானமாகவோ அல்லது மிகவும் அவசரமாகவோ இருக்கலாம். இருப்பினும், நாம் வேலைக்குச் செல்லத் தயாராகும் முன், வீட்டில் இருக்கும் சில மணிநேரங்களில் அந்த அற்புதமான காலைப் பொழுதை ரசித்து செலவழிப்பதன் மூலம், அந்த நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.
அதிகாலையில் எழுந்திருப்பதால், நாளை மெதுவாகத் தொடங்கி, அதிக மணிநேரங்களை மகிழ்ச்சியாக கடக்க வழிசெய்கிறது. தினமும் காலை வேளையைப் பார்ப்பது, நமக்கு புத்துணர்ச்சியை தரலாம். அவசரத்தில் செய்யப்படும் வேலையை தவிர்த்து, நிம்மதியான மனநிலையுடன் அந்த நாளை கடக்க முடியும். அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சில அற்புதமான நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
அதிக நேரம் கிடைக்கும்: எல்லோருக்கும் முன்பாக நாம் அதிகாலையில் எழுந்தால், நம்மை நாம் கவனித்து கொள்ள அதிக நேரம் கிடைக்கும். தியானம் அல்லது உடற்பயிற்சி செய்வது போன்றவற்றின் மூலம் நமக்கான நேரத்தை திட்டமிடலாம். நேர்மறையான எண்ணங்கள் வர காலையில் பத்திரிகைகளை படிக்கலாம்.
குறைவான போக்குவரத்து: பெரும்பாலானோர் தினந்தோறும் காலை அலுவலகத்திற்கு அவசர கதியில் தான் செல்கின்றனர். இவ்வாறு கிளம்புவதன் மூலம் நமக்கு நேர விரயம் ஏற்படுவதோடு, அலுவலகத்தை அடைவதற்கு முன்பாகவே சோர்வு நம்மை தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க காலை சிறிது முன்பாக கிளம்பும் பட்சத்தில் முன்னதாகவே அலுவலகத்தை நிம்மதியாக அடையலாம். மேலும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போதும் அதற்கு நேர்மாறாக, முன்கூட்டியே கிளம்பி, அதிக போக்குவரத்தை தவிர்க்க முடியும். இந்த பொன்னான நேரங்களை வேறு விஷயங்களில் செலுத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது.
சிறந்த தூக்கம்: நாம் அதிகாலையில் எழுந்தவுடன், உடலின் சர்க்காடியன் ரிதம் சீராக்கப்படும். எனவே, இரவில் நேரத்தை அதிகமாக கடத்தாதமல் சரியான நேரத்தில் தூங்கி, சுமார் 7-8 மணிநேர ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுவதன் மூலம் உடலும், மனதும் புத்துணர்ச்சி பெற்று காலையில் மகிழ்ச்சியுடன் எழுந்திருக்க உதவுகிறது. மேலும் அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவுகிறது.
ஆரோக்கியமான சருமம் நமக்கு போதுமான அளவு தூக்கம் இல்லாமல் இருப்பின், வயதுக்கு ஏற்ப சருமம் மற்றும் முடி பாதிக்கப்படும். தோளில் சுருக்கங்கள், வெளிர் தோல் மற்றும் முகப்பரு உள்ளிட்டவை ஒழுங்கற்ற தூக்க முறையால் நம்மை பாதிக்கக்கூடும். நாம் சீரான அளவு தூங்குவதன் மூலம் முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடிகிறது.
காலை உணவு: நம்மில் பலருக்கு காலை உணவு உண்பதே அரிதாக இருக்கிறது. நேரமின்மையால் பலரும் காலை உணவை தவிர்க்கின்றனர். இது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். காலை உணவு என்பது நம் அன்புக்குரியவர்களுடன் மெதுவாக நேரத்தை கழித்து உண்பது. நாம் அதிகாலையில் எழுந்தால், காலை உணவுக்கு அதிக நேரம் கிடைக்கும், மேலும் சில மணிநேரங்களை குடும்பத்துடனும் செலவிடலாம்.