அணுசக்தியின் மோதல் மனித குலத்தின் முடிவாக மாறும் ஆபத்து
30 கார்த்திகை 2024 சனி 08:03 | பார்வைகள் : 2072
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது ஹைப்பர்சோனிக் அணு ஆயுதக் குவியல்களால் உலகை மிக மோசமான நெருக்கடிக்குத் தள்ளுவார் என அந்த நாட்டின் மிக ஆபத்தான நபர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அது மனிதகுலத்தின் முடிவாக மாறும் ஆபத்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவின் செல்வாக்குமிக்க நாடாளுமன்ற உறுப்பினரான Andrey Lugovoy என்பவரே விளாடிமிர் புடின் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புடின் விமர்சகர் அலெக்சாண்டர் லிட்வினென்கோ என்பவரை கடந்த 2006 ல் லண்டனில் வைத்து கொடிய பொலோனியம்-210 ஐப் பயன்படுத்தி கொலை செய்தவர் இந்த Andrey Lugovoy.
இவரே தற்போது புடின் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
58 வயதான லுகோவோய், லண்டனில் விசாரணைக்காக தேடப்பட்டு வந்தாலும், ரஷ்ய ஜனாதிபதி மாளிகையால் நாடுகடத்தலில் இருந்து பாதுகாக்கப்பட்டார்.
ரஷ்ய ஊடகம் ஒன்றில் கலந்துரையாடிய லுகோவோய், உலகின் பல நாடுகளிடம் தற்போது அணு ஆயுதங்கள் உள்ளன, அணுசக்தி மோதல்களின் சாத்தியத்திற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
குறிப்பாக நாம் நமது அணு கோட்பாட்டை மாற்றியுள்ளோம்.
அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான வரம்பையும் குறைத்துள்ளோம் என்றார்.
ரஷ்யாவை போருக்கு தள்ளியது மேற்கத்திய நாடுகளே என குற்றஞ்சாட்டியுள்ள அவர், மேற்கத்திய நாடுகளுக்கு நாம் அடிமையாக வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மனிதகுலத்தின் முடிவு குறித்து தான் விளாடிமிர் புடின் தற்போது விவாதித்து வருவதாக குறிப்பிட்டுள்ள லுகோவோய், நம்மிடம் இரண்டு வாய்ப்புகளே உள்ளது.
உலக நாடுகளின் அழிவு அல்லது ரஷ்ய வரலாற்றின் முடிவு என்றார்.
லிட்வினென்கோவின் மரணம் குறித்த கொலை விசாரணை தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டால் லுகோவாய் தேடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.