பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றம்: முதல்வருக்கு அண்ணாமலை எதிர்ப்பு

13 பங்குனி 2025 வியாழன் 18:14 | பார்வைகள் : 1232
நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் தொடர்பான முன்னோட்ட வீடியோவில், முதல்வர் ஸ்டாலின், நாடு முழுதும் பயன்படுத்தப்படும் ரூபாய்க்கான குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான 'ரூ ' என குறிப்பிட்டு உள்ளார். இந்த மாற்றத்திற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
ரூபாய் என்பதை குறிப்பிட நாடு முழுவதும் தேவநாகிரி எழுத்துரு, கடந்த 2010ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு வரை தமிழக அரசும், இந்த குறியீட்டை பயன்படுத்தி வந்தது.
தமிழக அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ரூபாய்க்கான குறியீட்டிற்கு பதில் தமிழ் எழுத்தான 'ரூ' எனக்குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், இந்திய அரசின் 14 அலுவல் மொழிகளில் ஒன்றை தான் முதல்வர் பயன்படுத்தி உள்ளார். இது தாய்மொழி மீதான பற்றை வெளிப்படுத்துகிறது. இது அரசியல்சாசனத்திற்கு எதிரானது இல்லை எனக்கூறப்பட்டு இருந்தது. இந்த மாற்றம் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2025 -26 ம் ஆண்டுக்கான தி.மு.க., அரசின் பட்ஜெட்டில், தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீடு மாற்றப்பட்டு உள்ளது. இந்த குறியீடு, பாரதம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நமது நாணயத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகன் ஆவார். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே தொகுதி மறுவரையறை மற்றும் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய - மாநில அரசுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ள நிலையில், அடுத்ததாக இந்த விவகாரம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.