Paristamil Navigation Paristamil advert login

சூரியன் எப்படி உருவானது....?

சூரியன் எப்படி  உருவானது....?

13 கார்த்திகை 2023 திங்கள் 14:54 | பார்வைகள் : 2496


நமது சூரியன் உருவான போது, அதாவது 460 கோடி ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று அது பிறந்த நேரத்தில் அந்த காட்சியை படம் எடுக்க நினைத்தால் அது முடியுமா?

ஆனால், சூரியனை ஒத்த வேறொரு நட்சத்திரத்தின் பிறப்பைக் கண்கூடாகப் பார்ப்பதன் மூலம், நமது சூரியனின் பிறப்பு குறித்த அதிசயத்தை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும். அதையே இப்போது ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி செய்துள்ளது.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) மூலம் தற்போது கிடைத்துள்ள இந்த அற்புதமான, புகழ்பெற்ற புதிய படத்திலிருந்து உங்களுக்கு ஒரு ஆதாரம் கிடைக்கும்.

இப்படத்தின் மையத்தில், 50,000 ஆண்டுகள் பழமையான HH212 என்று அழைக்கப்படும் இந்தத் தொடக்கநிலை 'குழந்தை நட்சத்திரம்' உள்ளது.

நம்முடைய சூரியனும் இதே வயதாக இருந்தபோது இந்தக் காட்சியில் தோன்றுவதைப் போலவேதான் இருந்திருக்கும்.

வாயு மற்றும் தூசியின் அடர்த்தியான, சுழலும் வட்டுக்குள் மறைந்திருப்பதால், புரோட்டோ ஸ்டார் நிலையில் இருந்தே பளபளப்பை நீங்கள் உண்மையில் பார்க்க முடியாது.

துருவ எதிர் திசைகளில் அதிவேகமாகப் பாயும் இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு வண்ணத்திலான வாயுக்கள் மற்றும் தூசியின் காட்சிகள் மட்டுமே உங்களுக்குக் கிடைக்கும்.

HH212 என்ற இந்த குழந்தை நட்சத்திரம் ஓரியனில் அமைந்துள்ளது. மேலும், இது நட்சத்திரக் கூட்டத்துக்குப் பெயரை அளித்த மூன்று பிரகாசமான நட்சத்திரங்களுக்கு அருகில் உள்ளது. இந்த நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு சுமார் 1,300 ஒளி ஆண்டுகள் ஆகும்.

வியத்தகு வகையில் வெளியேறும் வாயுக்களின் ஆற்றல் தான் இந்த குழந்தை நட்சத்திரம் அதன் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறையாகும். அதில் தெரியும் வண்ணங்களின் மூலமாக அந்த வாயுக்களை நாம் தெரிந்துகொள்ளலாம்.

"மையத்தில் உள்ள வாயுப் பந்து சுருக்கப்படுவதால், அது சுழல்கிறது. ஆனால் அது மிக வேகமாகச் சுழன்றால், அது தனியாகப் பிரிந்து பறந்துவிடும். எனவே ஏதாவது கோண உந்தத்திலிருந்து விடுபட்டால் மட்டுமே அது அப்படி தனியாகச் செல்ல முடியும்," என்று பேராசிரியர் மார்க் மெக்காக்ரியன் விளக்கினார்.

"இது வெளிநோக்கி அதிவேகமாகப் பாயும் வாயுக்கள் என்று தான் என்று நாங்கள் நினைக்கிறோம். அனைத்து பொருட்களும் சுருங்கும்போது, ​​காந்தப்புலங்கள் ஒன்றாக இழுக்கப்படுகின்றன.

பின்னர் மைய வட்டு வழியாக வரும் சில பொருட்கள் காந்தப்புலங்களினால் ஈர்க்கப்பட்டு துருவங்கள் வழியாக வெளியே அதிவேகமாக வீசப்படுகின்றன. அதனால்தான் நாம் இந்த கட்டமைப்புகளை இருமுனை என்று அழைக்க முடிகிறது" என்று ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் மூத்த அறிவியல் ஆலோசகர் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.

இளஞ்சிவப்பு-சிவப்பு நிறம் மூலக்கூறு ஹைட்ரஜன் இருப்பதைக் காட்டுகிறது. இது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது (புரோட்டோ ஸ்டாரின் பெயரில் உள்ள "HH" போல). 2.12 மைக்ரான் அகச்சிவப்பு அலைநீளத்தில் (இது புரோட்டோ ஸ்டாரின் பெயரின் இரண்டாம் பகுதி) முக்கியமாகப் படம் பிடிக்கப்பட்ட இந்த வெப் படத்தில் அதிர்வலைகள் வெளியேறி, அவற்றை ஒளியேற்றி, பிரகாசமாக ஒளிரச் செய்கின்றன.

மேலே உள்ள படத்தில், இடது மற்றும் வலது புறம் உள்ள காட்சிகளை உன்னிப்பாகப் பார்த்து, அவை ஒவ்வொன்றிலும் பிரகாசத்தின் முடிச்சுகளைக் கண்டறியவும். அந்த அதிர்வுகளை எண்ணிப் பாருங்கள். வேகமான பொருள் அதற்கு சற்று முன்னால் மெதுவாகச் செல்லும் பொருளில் மோதியதால் ஏற்பட்ட அதிர்வுகள் தான் அவை.

இந்த கட்டமைப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் சமச்சீராக உள்ளன. வலதுபுறத்தில் மிகவும் குழப்பமான அதிர்வுகள் இருந்தாலும் அவை கூடுதலாக இருப்பதாகத் தோன்றுகிறது.

உண்மையில், மறுபுறம் ஒரு முழுமைப்படுத்தும் அதிர்வுகள் இருக்கலாம். இந்த வெப் படத்தின் பரந்த காட்சியில் நிச்சயமாக அதுகுறித்த பிங்க் நிற குறிப்புகள் உள்ளன. அந்தத் திசையில் விண்வெளியில் உள்ள வாயு மற்றும் தூசியின் அடர்த்தி மெல்லியதாக இருப்பதால், தூண்டுவதற்கு குறைவான பொருள் உள்ளது. அதனால் அதிர்ச்சியின் அமைப்பு மிகவும் பரவலானதாகத் தோன்றுகிறது.

வானியல் விஞ்ஞானிகள் HH212- ஐ 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர். அது என்ன மாற்றங்களை எதிர்கொள்கிறது என்பதைப் பார்க்க அவ்வப்போது அதன் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜேம்ஸ் வெப் சூப்பர் தொலைநோக்கியில் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பது போல, முன்பு இருந்ததை விட 10 மடங்கு கூர்மையான படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், விஞ்ஞானிகள் நட்சத்திர உருவாக்கத்தை தூண்டும் செயல்முறைகளை ஆழமாக ஆராய இந்த படங்கள் உதவிகரமாக இருக்கும்.

அதிவேகமாக வெளியேறும் வாயு கட்டமைப்புகளில் உள்ள கூறுகள் காலப்போக்கில் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பார்க்க, ஒரு முழு பட வரலாற்றையும் ஒன்றாக இணைத்துப் பார்ப்பது ஒரு நல்ல அம்சமாகும். மீண்டும் மீண்டும் கவனிப்பதன் மூலம், அந்த விண்பொருட்கள் நகரும் வேகத்தையும் நீங்கள் அளவிட முடியும். அது வினாடிக்கு 100 கிமீ மற்றும் அதற்கு மேல் இருக்கும்.

HH என்பது மூலக்கூறு ஹைட்ரஜனைக் குறிக்கிறது. அது ஒரு நேர்த்தியான பொருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் 1940கள் மற்றும் 50களில் இந்த வகைப் பொருளில் முன்னோடியாகப் பணியாற்றிய ஜார்ஜ் ஹெர்பிக் மற்றும் கில்லர்மோ ஹாரோ ஆகியோருக்குப் பிறகு இந்த HH என்பது உண்மையில் ஹெர்பிக்-ஹாரோவைக் குறிக்கிறது.

ஜேம்ஸ் வெப்பின் திறன்களைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. வெப் அதன் 6.5 மீட்டர் நீளமுள்ள முதன்மைக் கண்ணாடியால் காட்சிப்படுத்தக் கூடிய படத்தின் கூர்மை மட்டுமல்ல, அதன் கருவிகள் இப்போது கண்டறியக் கூடிய வண்ணத்தின் ஆழமும் இந்த தொலைநோக்கியை மிகவும் சிறப்பானதாக்குகிறது.

"நாங்கள் கூறியது போல், இந்த விஷயங்களைப் பார்ப்பதற்கான முக்கிய அலைநீளம் - அதிர்வடைந்த மூலக்கூறு ஹைட்ரஜனைப் பார்ப்பதற்கு - 2.12 மைக்ரான் அல்லது நடுவில் காணக் கூடியதை விட தோராயமாக நான்கு மடங்கு அதிகம். ஆனால் முதல் முறையாக, இப்போது நம்மிடம் ஒரு நல்ல வண்ணப் படம் உள்ளது.

இந்தக் குறிப்பிட்ட பொருளை நீங்கள் தரை தொலைநோக்கியில் இருந்து பார்க்க முடியாது என்பதுடன், மற்ற அலைநீளங்களில் எங்களால் அதைப் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் அதிவேகமாக வெளியேறும் வாயுக்களில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிய இது எங்களுக்கு உதவும்" என்று பேராசிரியர் மெக்காக்ரியன் கூறினார்.

ஜேம்ஸ் வெப் பல வானியல் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெர்பிக்-ஹாரோ பொருட்கள் குறித்த ஆய்வுகள் நிச்சயமாக பயனடைந்துள்ளன.

கீழே பாருங்கள், HH211 எனப்படும் HH212 தம்பியைப் பார்த்து நீங்கள் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். பெர்சியஸ் விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள இந்த விண்பொருள் இன்னும் குழந்தை நிலையிலேயே உள்ளது. அதாவது சிலஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தான் அது தோன்றியிருக்க வேண்டும். நம் சூரியன் இப்படித் தான் உருவாகி தற்போதைய நிலையை அடைந்துள்ளது என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (JWST) என்பது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடிய விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்