Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

14 கார்த்திகை 2023 செவ்வாய் 07:13 | பார்வைகள் : 2314


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இசை சர்ச்சையில் சிக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் சென்னையில் நடத்திய இசைநிகழ்ச்சி முறையற்ற ஏற்பாடுகள் காரணமாக பெரிய சர்ச்சையை உருவாக்கியது. போலி டிக்கெட்டுகள் விற்பனை, அளவுக்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம், முறையற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் என பல பிரச்சினைகளை அது சந்தித்தது.

இதனால், ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் கோபமடைந்த ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய காவல்துறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதுமட்டுமல்லாமல், நிகழ்ச்சிக்காக பணம் கொடுத்து பங்கேற்க முடியாமல் போனவர்களுக்கும் பணம் திரும்பக் கொடுக்கப்பட்டது. இந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பே ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டுமொரு இசை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த நவம்பர் 10-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான திரைப்படம் ’பிப்பா’. இப்படம் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

இந்த படத்தில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுதந்திர எழுச்சி கவிஞரான கசி நஸ்ரூல் இஸ்லாம் எழுதிய பாடலை இந்த காலத்திற்கு ஏற்ப மறுஉருவாக்கம் செய்திருந்தார் ரஹ்மான். அந்த பாடல் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த பாடலை அவர் சரியாக மறுஉருவாக்கம் செய்யவில்லை என்றும் நஸ்ரூலின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து நஸ்ரூலின் பேரன் அனிர்பன் கூறுகையில், “என்னுடைய தாத்தா 1922-ம் ஆண்டு சிறையில் இருந்தபோது எழுதிய அப்பாடல் 1949-ம் ஆண்டு பாடலாக மாற்றப்பட்டது. இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பாக மறு உருவாக்கம் செய்வார் என்று நம்பிதான் அதற்கான உரிமையை வழங்கினோம். ஆனால், அவர் அதற்கு நியாயம் சேர்க்கவில்லை. அதன் உணர்வையும் இசையையும் ஏ.ஆர்.ரஹ்மான் சீர்குலைத்து விட்டார்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பாடலை ‘பிப்பா’ படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று நஸ்ரூலின் பேத்தி அனிந்திதா வலியுறுத்தியுள்ளார். இந்த பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘பிப்பா’ படக்குழு நஸ்ரூலின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் இந்த சர்ச்சை குறித்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்