பிணைக் கைதிகளை விடுவிக்க தயாராகும் ஹமாஸ் அமைப்பு
14 கார்த்திகை 2023 செவ்வாய் 09:11 | பார்வைகள் : 3929
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.
பெரும்பாலான உலக நாடுகள் காசாவில் போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறும் இஸ்ரேலை அறிவுறுத்தி வருகின்றனர்.
ஹமாஸ் அமைப்பினரை வேரோடு அழிக்கும் வரை தாக்குதலை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதனால் காசாவில் உள்ள மக்களுக்கு முதலுதவி மற்றும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
இந்நிலையில் 70 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் படையினர் திங்கட்கிழமை கத்தார் மத்தியஸ்தர்கள் இது குறித்து வழங்கிய தகவலில், காசாவில் 5 நாள் எத்தகைய தாக்குதலும் இல்லாத போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவுக்குமானால் பெண்கள் குழந்தைகள் உட்பட 70 பிணைக் கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த போர் நிறுத்தத்தின் போது காசாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் உதவி மற்றும் மனிதாபிமான நிவாரணங்களை அனுமதிக்க வேண்டும் என ஹமாஸின் செய்தித் தொடர்பாளர் அபு உபைதா டெலிகிராமில் பதிவு செய்யப்பட்ட ஆடியோவில் தெரிவித்துள்ளார்.