வலிகள் மற்றும் நரம்பியல் நோய்களுக்கான prégabaline மாத்திரைகள்; போதைப்பொருளாக மாறிவிட்டது. ANSM.
14 கார்த்திகை 2023 செவ்வாய் 15:21 | பார்வைகள் : 5893
ஏழைகளின் மருந்து என்று புனைபெயரில், 'Lyrica' என்று மறைமுகமான பெயரிலும் அழைக்கப்படும், கால்-கை வலி மற்றும் பொதுவான கவலைக் கோளாறு, நரம்பியல் வலி ஆகியவற்றைக் குணப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது prégabaline என்னும் மாத்திரைகள் இன்று ஒரு போதைப்பொருளாக பாவிக்கப்படுகிறது என தேசிய மருந்துகள் பாதுகாப்பு நிறுவனம் (ANSM) எச்சரித்து உள்ளது.
குறித்த மாத்திரைகளை போதைப்பொருளாக பாவிக்கும் பழக்கம் முதலில் ஸ்வீடன் மற்றும் ஜெர்மனியில் 2010ல் ஆரம்பமாகியது, பின்னர் மெல்ல மெல்ல ஐரோப்பிய நாடுகளில் பரவியது; மருத்துவர்களின் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் வாங்க முடியாத prégabaline மாத்திரைகள் இன்று கள்ளச் சந்தையில் விற்பனையாகிறது. அல்லது போலியாக தயாரிக்கப்படும் மருந்துச் சீட்டுகள் மூலமும் கொள்வனவு செய்யப்படுகிறது.
மது, புகையிலை, போதைப்பொருட்களுக்கு அடிமையாவது போல் பலரும் prégabaline மாத்திரைகளுக்கு அடிமையாகி உள்ளனர். சரியான காரணங்கள் இல்லாமல், மருத்துவரின் ஆலோசனை இன்றி எடுத்து கொள்ளப்படும் prégabaline மாத்திரைகள் உட்பட அனைத்து மருந்து மாத்திரைகளும் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுடன், மரணங்கள் சம்பவிக்க காரணங்கள் ஆகலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.