ஐக்கிய அமீரகத்தில் குடியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு விசா...
15 கார்த்திகை 2023 புதன் 02:28 | பார்வைகள் : 3542
ஐக்கிய அமீரகத்தில் குடியிருக்கும் வெளிநாட்டவர்களில் ஓய்வு பெற்றவர்கள் அல்லது 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த 5 ஆண்டுகளுக்கான சிறப்பு விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.
குறித்த விசா தாரர்கள் தங்கள் மனைவி அல்லது கணவன் மற்றும் பிள்ளைகளுக்கும் ஸ்பான்சர் செய்யவும் முடியும்.
தொடர்புடைய 5 ஆண்டு கால விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஆண் அல்லது பெண் கண்டிப்பாக ஐக்கிய அமீரகத்தில் அல்லது வளைகுடா நாடுகளில் குறைந்தது 15 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது 55 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், குறைந்தபட்ச மாத வருவாய் 15,000 திர்ஹாம் என இருக்க வேண்டும்.
3 ஆண்டுகளுக்கான வைப்புத் தொகையாக 1 மில்லியன் திர்ஹாம் வங்கி சேமிப்பில் இருக்க வேண்டும்.
1 மில்லியன் திர்ஹாம் மதிப்பிலான சொத்து இருக்க வேண்டும்.
சேமிப்பு நிதியை காரணமாக கொண்டு நீங்கள் விசா விண்ணப்பிக்க முடிவு செய்தால் GDRFA நிர்வாகத்தை இணைய ஊடாக அணுக வேண்டியிருக்கும்.
அதேவேளை சொத்து இருப்பதாக கூறி விசாவுக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தால் DLD நிர்வாகத்தை அலுவலகத்தில் சென்று அணுக வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் பிள்ளைகள் மற்றும் மனைவி அல்லது கணவரின் கடவுச்சீட்டு நகல்கள், திருமண சான்றிதழ் நகல், நீங்கள் ஐக்கிய அமீரகத்தில் குடியிருப்பவர் என்றால் தற்போதைய விசா நகல், ஐக்கிய அமீரக அடையாள அட்டை நகல் மற்றும் அதிகாரிகள் கோரும் ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் விண்ணப்பமானது GDRFA அல்லது DLD நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், நீங்கள் மொத்தமாக 3,714.75 திர்ஹாம் கட்டணமாக ஒவ்வொரு விண்ணப்பதாரரும் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் விசாவுக்கான செலவுகள், அடையாள அட்டை, மருத்துவ சோதனை உள்ளிட்ட அனைத்தும் நிறைவேற்றப்படும்.