தெற்கு காசாவில் நுழைய காத்திருக்கும் இஸ்ரேல் ராணுவம் - பீதியில் மக்கள்
17 கார்த்திகை 2023 வெள்ளி 09:09 | பார்வைகள் : 3702
வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் முக்கியமாக வடக்கு காசாவில் உள்ள வைத்தியசாலைகளை முற்றுகையிட்டு ஹமாஸ் அமைப்பினரை தேடி வருகிறது.
இதில் அல்-ஷிபா ஆஸ்பத்திரிக்குள் நேற்று முன்தினம் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனை அறைகளை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் இருப்பதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல் ராணுவம், இந்த சோதனையில் அத்தகைய சந்தேகத்துக்கு இடமான எதையும் கண்டறியவில்லை. அதேநேரம் சில துப்பாக்கிகள் மற்றும் ஹமாஸ் அமைப்பினரின் சீருடைகள் என ஒருசில பொருட்களே அங்கே கிடைத்தன.
அதைத்தவிர சுரங்க அறைகளோ, கட்டுப்பாட்டு மையங்களோ எதுவும் இல்லை.
இதனால் இஸ்ரேல் ராணுவத்தினரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது தெளிவாகி இருப்பதாக காசாவாசிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தேடுதல் வேட்டை நடத்திய இஸ்ரேல் ராணுவம் அடுத்தாக தெற்கை குறி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக தெற்கு காசா நகர வீதிகளில் இஸ்ரேல் ராணுவம் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வருகிறது.
அதில், பயங்கரவாதிகளின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பயங்கரவாதிகளின் வசிப்பிடங்கள் அல்லது அவர்களுடன் காணப்படும் மக்களின் உயிர் அபாயத்தில் தள்ளப்படும் என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக தெற்கு நோக்கிய பயணம் குறித்து இஸ்ரேலிய ராணுவ மந்திரியும் நேற்று முன்தினம் சூசகமாக தெரிவித்து இருந்தார். வடக்கு, தெற்கு என ஹமாஸ் அமைப்பினர் எங்கே இருந்தாலும் அவர்கள் மீது தாக்குவோம் என அவர் கூறியிருந்தார்.
ஏற்கனவே வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்ததால் அங்கே வசித்து வந்த சுமார் 23 லட்சம் பேர் தெற்கு காசாவுக்கு இடம்பெயர்ந்து இருந்தனர். தற்போது தெற்கிலும் ராணுவம் நுழையும் திட்டம் அவர்களுக்கு மேலும் பீதியை அளித்து இருக்கிறது.
தெற்கு காசாவில் இஸ்ரேல் ஏற்கனவே வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் அங்கே எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தற்போது தரைவழி தாக்குதலும் தொடங்கினால் அந்த மக்களின் நிலைமை மேலும் மோசமாகும் அபாயம் நிலவி வருகிறது.