வழக்கு உள்ள போது சிறப்பு சட்டசபை கூட்டம் எதற்கு? பழனிசாமி கேள்வி: காரசார விவாதம்
18 கார்த்திகை 2023 சனி 14:50 | பார்வைகள் : 2891
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில், சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரை கூட்டியது ஏன் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பொன்முடி, பதிலளிக்க அவையில் காரசார விவாதம் நடந்தது.
சிறப்பு சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் ரத்து என்றோ, நிராகரிக்கப்பட்டது என்றோ கூறப்படவில்லை என்றார்
ரகுபதி:
மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இல்லாத அதிகாரத்தை இருப்பது போல் நினைத்து கொண்டு கவர்னர் செயல்படுகிறார். மசோதா நிறுத்தி வைக்கப்படவில்லை. திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. அமைச்சரவை அறிவுரைப்படியே கவர்னர் செயல்பட வேண்டும்.
தங்கம் தென்னரசு
கவர்னர் மசோதாக்களை நிலுவையில் வைக்கிறார் என்றால், அதனை நிராகரிக்கிறார் என்று பொருள். காலாவதியாகிவிட்டதா அல்லது செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு
மசோதாக்கள் குறித்து பழனிசாமி கேள்வி நியாயமானது. அரசியலமைப்பு சட்டத்தில் மறு ஆய்வுக்கு உட்பட்டது அல்லது மறு ஆய்வு செய்யக்கடாது என எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. நீட் மசோதா, ஆன்லைன் ரம்மி மசோதா எவ்வாறு மாற்றம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டதோ அது போல் 10 மசோதாக்களும் அனுப்பப்படும். 2 ஆண்டுகள் கழித்து மசோதாக்களை திருப்பி அனுப்பியதில் உள்நோக்கம் உள்ளது. வழக்கு நிலுவையில் .உள்ள போதே கவர்னர் மசோதாக்களை திருப்பி அனுப்பியதால் மீண்டும் நிறைவேற்றப்படுகிறது.
பழனிசாமி
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்ததால், அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள போது தீர்மானம் கொண்டு வருவது சரியா? தீர்ப்பு வருவதற்கு முன்னரே ஏன் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வந்தால், சிறப்பு கூட்டத்திற்கு தேவை இருக்காது.
துரைமுருகன்
வழக்கு தொடர்ந்த உடனேயே மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார். அப்போது ஏதாவது யோசனை சொல்லியிருந்தால், அதனை இந்த மன்றம் ஏற்கலாம். ஏற்காமல் போகலாம். அதனை நிறைவேற்றி அனுப்பும் போது, அதற்கு அவர் ஒப்புதல் அளித்து ஆக வேண்டும். அவர் வலையில் சிக்கி உள்ளார். வழக்கு விசாரணைக்கு வரும் போது மசோதாக்களை திருப்பி அனுப்பி விட்டதாக கவர்னர் கூறுவார். அதற்குள் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்புவோம் என்றார்.
சபாநாயகர்
வழக்கு நிலுவையில் உள்ள போது, மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியது சரியா?
பழனிசாமி
சபாநாயகர் அவர்களே, நீங்கள் நடுநிலைமையோடு இருக்க வேண்டும். அமைச்சர்கள், முதல்வர் சொல்ல வேண்டிய பதில்களை எல்லாம் நீங்களே சொல்லி விடுகிறீர்கள். எல்லா இலாகாவுக்கும் நீங்கள் பதில் சொல்கிறீர்கள். நாங்கள் பேசுவது வெளியே வருவது இல்லை. நீங்கள் பேசுவது மட்டும் வெளியே வருகிறது.
நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறிப்பிட்டு தான் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள் அதன் முடிவு வரும் வரை காத்திருக்கலாம்.
பொன்முடி
நமக்கு சாதமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னர் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி உள்ளோம்.
துரைமுமுருகன்
10 மசோதாக்கள திருப்பி அனுப்பினார். அதனை நிறைவேற்றி அனுப்புவோம்.
பழனிசாமி
12 மசோதாக்களுக்கு மட்டும் தான் வழக்கு தொடர்ந்து உள்ளீர்களா? அல்லது நிலுவையில் இருக்கும் அனைத்து மசோதாக்களுக்கும் சேர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளீர்களா?
ரகுபதி
12 மசோதா தவிர சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 5 மசோதாக்கள் கவர்னரிடம் உள்ளது. அது குறித்த கோரிக்கை மனுக்களும் நிலுவையில் உள்ளது. அனைத்திற்கும் விரைவாக ஒப்புதல் தர வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.
பழனிசாமி
உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் போது, சிறப்பு சட்டக்கூட்டத்தொடருக்கு தேவையிருக்காதே.
முதல்வர்
மாநில சுயாட்சியில் மாநில அரசு உறுதியாக உள்ளது. மீதம் உள்ள சட்ட முன்வடிவுகள் குறித்த விவரங்கள் விசாரணைக்கு வரும் போது, எடுத்து சொல்லி கவர்னர் விரைந்து நடவடிக்கை எடுக்க அரசு ஆவண செய்யும்.
பழனிசாமி
1994 ஜன.,மாதமே 29 ஆண்டுகளுக்கு முன்பாகவே, நீங்கள் கொண்டு வந்த சட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்தது. அப்போது, அதனை எதிர்த்து உங்கள் அமைச்சர்கள் கூறிய கருத்து சட்டசபையில் பதிவாகி உள்ளது.
துரைமுருகன்
முந்தைய காலங்களில் முதல்வருடன் கலந்து பேசி தான் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டார்கள். செனட் மற்றும் சிண்டிக்கேட் ஒப்புக் கொண்ட பிறகும் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்காதது சர்வாதிகாரம்.
பழனிசாமி
அவை முன்னவர் சாத்வீகமாக பதில் சொல்கிறார்.
முதல்வர்
சாத்வீகமாக பதில் சொல்லவில்லை. உண்மையை சொன்னார்.
பழனிசாமி
அப்போதும், சிண்டிகேட் , செனட் இருந்தது. முதல்வரே, பல்கலைகழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என திமுக அரசு இன்று கொண்டு வந்திருக்கும் மசோதாவை, 1994 ல் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தி.மு.க., ஆட்சியில் அந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறுவதாக அமைச்சராக இருந்த அன்பழகன் அறிவித்தார்.அன்றைய தினமே முடிவு எடுக்கப்பட்டு இருந்தால் பிரச்னை இருக்காதே ?
முதல்வர்
நான் ஏற்கனவே தெளிவாக பதில் சொல்லி உள்ளேன். அப்போது எல்லாம் வேந்தர்கள் நியமனம் அரசுடன் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள். இப்போது அப்படி நடக்கவில்லை. மீறப்படுகிறது. அதனால், தான் இந்த தீர்மானம்.
பழனிசாமி
துணைவேந்தர்கள் நியமனம் என்பது ஒரே மாதிரி தான் நடக்கிறது. அப்போது முதல் இப்போதுவரை ஒரே சட்டம் தான் உள்ளது. அது மாறவில்லை. வேந்தரை மாற்ற வேண்டும் என ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை வெளியிட்டார். 1994ம் ஆண்டு ஜன.5 நிலவரப்படி 13 பல்கலை வேந்தர் பொறுப்பை கவர்னரிடம் இருந்து மாற்றி முதல்வர் தான் வேந்தர் என சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினர். அதற்கு கவர்னர் ஒப்புதல் கிடைக்குமா என கேள்வி எழுந்தது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால், முதல்வர் இருக்க மாட்டார். அப்போது வேந்தர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதனால் இந்த சட்டம் தேவையற்றது என திமுக.,வின் கருத்து என கருணாநிதி கூறியுள்ளார்.
நான் யாருக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அன்றைக்கே அ.தி.மு.க.,வின் மசோதாவை தி.மு.க., ஆதரித்து இருந்தால், இன்றைக்கு பிரச்னையே இருந்து இருக்காது. ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு; இல்லாத போது ஒரு நிலைப்பாடு, என தி.மு.க.,வுக்கு ஏன் இரட்டை நிலைப்பாடு. எந்த நல்லது கொண்டு வந்தாலும் ஆதரிக்க வேண்டும் என்பது அதிமுக.,வின் நிலைப்பாடு. எனக்கூறினார். இவ்வாறு காரசார விவாதம் நடந்தது.
அதிமுக வெளிநடப்பு
இதன் பிறகு அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.