9வது நாளாக சுரங்கப்பாதை மீட்பு பணி: உணவு, குடிநீர் வழங்க 40 மீட்டருக்கு குழாய்
20 கார்த்திகை 2023 திங்கள் 08:26 | பார்வைகள் : 3136
உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 9வது நாளாக நடந்து வருகிறது. மீட்பு பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா - தண்டல்காவ்ன் இடையே மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, சுரங்கப் பாதையின் முகப்புக்கும், தொழிலாளர்கள் பணி செய்த பகுதிக்கும் இடைபட்ட பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில், 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர். ஒரு வாரமாக, அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
உள்ளே சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவுகள் உள்ளிட்டவற்றை வழங்க 40 மீட்டருக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை கண்காணிக்கவும், துரிதப்படுத்தவும், பல் துறை உயரதிகாரிகள், சில்க்யாராவில் முகாமிட்டுள்ளனர். பிரதமர் அலுவலக அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர்.
மீட்பு விபரங்களை கேட்டறிந்த பிரதமர்
உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்பு பணி விபரங்கள் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். தேவையான மீட்பு கருவிகளை மத்திய அரசு ஏற்பாடு செய்து தரும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து உத்தரகண்ட் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்.
மேலும், 41 தொழிலாளர்களின் மன உறுதியைப் பேண வேண்டியது மிக அவசியம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்'' எனக் கூறப்பட்டுள்ளது.