Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்துக்கு சிறந்த செயல்திறன் விருது: ஜனாதிபதி முர்மு வழங்கினார்

தமிழகத்துக்கு சிறந்த செயல்திறன் விருது: ஜனாதிபதி முர்மு வழங்கினார்

21 கார்த்திகை 2023 செவ்வாய் 06:52 | பார்வைகள் : 2339


பிரதமரின் உணவு பதப்படுத்தும், குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தில், சிறந்த செயல் திறனுக்கான விருதை, தமிழகத்துக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

நாட்டில் அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை வலுப்படுத்த, 'பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம்' செயல்பாட்டில் உள்ளது. இது, மத்திய அரசு 60 சதவீதம்; மாநில அரசு, 40 சதவீத பங்களிப்புடனும் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில், தனி நபர்கள், சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள், புதிய தொழில் துவங்க அல்லது, ஏற்கனவே நடத்தி வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய, 10 சதவீதம் பங்களிப்பு தொகையுடன், 35 சதவீதம் மானியமாக, அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் மானியத்துடன், கடனுதவி வழங்கப்படுகிறது.

கடந்த 2020 - 21ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை, தமிழகத்தில் தனிநபர் பிரிவின் கீழ், 8,410 பேருக்கு, கடன் ஒப்பளிப்பு செய்து, 152.20 கோடி ரூபாய் மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது. டில்லி பிரகதி மைதானத்தில், இம்மாதம் 3ம் தேதி முதல், 5ம் தேதி வரை, உலக உணவுத் திருவிழா நடந்தது.

இந்நிகழ்ச்சியின் இறுதி நாளில், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில், சிறந்து செயல்பட்டு வரும் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு, சிறந்த செயல் திறனுக்கான விருது, ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

இவ்விருதை, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், அன்பரசன் ஆகியோர், நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் ஆணையர் நிர்மல்ராஜ் உடனிருந்தனர்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்