Paristamil Navigation Paristamil advert login

உண்மை சரிபார்ப்பு குழுவை அமைத்ததில் என்ன தவறு ! உயர் நீதிமன்றம்

உண்மை சரிபார்ப்பு குழுவை அமைத்ததில் என்ன தவறு !  உயர் நீதிமன்றம்

21 கார்த்திகை 2023 செவ்வாய் 10:01 | பார்வைகள் : 2178


தவறான செய்தியை கண்டறிய, 'உண்மை சரிபார்ப்பு குழு' அமைத்ததில் என்ன தவறு' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தமிழக அரசு, அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பாக, அனைத்து ஊடகங்களிலும் வெளியாகும் செய்திகளில், தவறானவற்றை கண்டறியும் வகையில், சிறப்பு திட்ட அமலாக்க துறையின் கீழ் உண்மை சரிபார்ப்பு குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான அரசாணை, கடந்த மாதம் 6ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலர் நிர்மல்குமார் தாக்கல் செய்த மனு:

அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவி வகிப்பவர்களுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்புபவர்களை கண்காணிக்க, போலீஸ் நிலையங்களில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த, டி.ஜி.பி.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. போலீஸ் துறையை கைவிட்டு, உண்மை சரிபார்ப்பு குழுவை அரசு அமைத்துள்ளது. இதற்கு, ஆளும்கட்சி ஆதரவாளரான ஐயன் கார்த்திகேயனை திட்ட இயக்குனராக நியமித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சியாக, இந்த அரசாணை உள்ளது. போலீஸ் வரம்புக்கு அப்பால், இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்பு குழு, தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு முரணானது. மத்திய அரசுக்கு தான், குழு நியமிக்க அதிகாரம் உள்ளது,'' என்றார்.

உடனே தலைமை நீதிபதி குறுக்கிட்டு, ''பொய் செய்தி பரவலை தடுக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா; இது ஒரு சரிபார்ப்பு முறை தானே. குழு அமைத்ததில் என்ன தவறு,'' என்று கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''பொய் செய்தி பரப்பியதாக, மனுதாரருக்கு எதிராகவே வழக்கு உள்ளது; இந்த மனுவைத் தாக்கல் செய்ய, அவருக்கு தகுதி இல்லை,'' என்றார்

இதையடுத்து, 'மத்திய அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்பு குழுவை எதிர்த்த வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது; அந்த வழக்கின் முடிவை தெரிந்து கொள்ளலாம்' எனக்கூறி, விசாரணையை, டிசம்பர் 6க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்