ஒலிம்பிக் போட்டிகளின் பின்னரும் மட்டுப்படுத்தப்படும் போக்குவரத்துக்கள்!
21 கார்த்திகை 2023 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 4576
அடுத்த ஆண்டு இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பரிசில் பல்வேறு வீதி போக்குவரத்துக்கள் மாற்றம்பெறுகின்றன. வேகக்கட்டுப்பாடுகளும், சில வீதிகள் ‘ஒருவழிப்பாதையாக’ மாற்றப்படவும் உள்ளன. இந்நிலையில், இந்த மாற்றங்கள் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த பின்னரும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ ZTL எனும் ஒரு போக்குவரத்து திட்டத்தினை சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்மொழிந்திருந்தார். zone à trafic limité எனும் இந்த திட்டத்தின் மூலம், பரிசில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளை நிரந்தரமாக இல்லாதொழிக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. பல முறை இந்த ZTL திட்டம் பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு திட்டத்தினையே ஒலிம்பிக் போட்டிகளின் போது அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. பாதசாரிகளுக்கும், துவிச்சக்கரவண்டிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் இந்த திட்டத்தினை பரிசில் நிரந்தரமாக்குவதற்கு (ஒலிம்பிக் போட்டிகளின் பின்னரும்) ஆன் இதால்கோ விரும்புவதாக அறிய முடிகிறது.
நேற்று திங்கட்கிழமை பரிசின் துணை முதல்வர் Emmanuel Grégoire இது குறித்த சில தகவல்களை வெளியிட்டார்.
“இந்த திட்டம் உண்மையில் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டது தான். ஆனால் இதன் தேவை பரிசுக்கு நிரந்தமாக உள்ளது. காவல்துறையினருடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் உள்ளோம்!” என அவர் தெரிவித்தார்.