தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக உள்ளது: கவர்னர் ரவி
23 கார்த்திகை 2023 வியாழன் 09:23 | பார்வைகள் : 2917
தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக உள்ளதால், பிற மாநிலங்களில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை தமிழகத்திற்கு அனுப்புவதை பாதுகாப்பாக உணர்கின்றனர்,'' என, தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய இளைஞர் விவகாரங்கள் விளையாட்டு அமைச்சகம் மற்றும் சென்னை நேரு யுவ கேந்திரா சங்கதன் சார்பில் நடக்கும், 15வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியை, நேற்று சென்னையில் கவர்னர் ரவி துவக்கி வைத்து பேசியதாவது:
உங்கள் வளர்ச்சிக்கு கல்வி மிக அவசியம். தமிழகத்தில் இருந்து செல்லும் முன், 'வணக்கம், நன்றி' உள்ளிட்ட சில வார்த்தைகளை தெரிந்து செல்லுங்கள். சென்னையை சுற்றிப் பாருங்கள். இங்குள்ள மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை தெரிந்து அனுபவம் பெறுங்கள்.
தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. இதனால், பிற மாநிலங்களில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை தமிழகம் அனுப்புவதை பாதுகாப்பாக உணர்கின்றனர். இங்கு, பழகும் நண்பர்களுடன், கடித போக்குவரத்து வைத்துக் கொள்ளுங்கள். இயற்கையை பாதுகாப்பது குறித்து, நாட்டு மக்கள் பழங்குடியினரிடம் இருந்து கற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு கவர்னர் பேசினார்.
பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த, 220 பழங்குடியின மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பரிமாற்ற நிகழ்ச்சி, 28ம் தேதி வரை நடக்க உள்ளது.
விருந்தில் பங்கேற்க கவர்னருக்கு காங்., - எம்.எல்.ஏ., அழைப்பு
நிகழ்ச்சியில், வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, ஹிந்தியில் பேசியதாவது: கவர்னர் உங்களுக்காக ஒரு மணி நேரம் செலவு செய்தது சாதாரண விஷயம் இல்லை. வலிமையான பாரதம் உருவாக வேண்டும் என்ற உறுதி இருப்பதால், உங்களுடன் பேச வந்துள்ளார். ஒரு நாள் உங்களுக்கு விருந்து வழங்க உள்ளேன். இதில், கவர்னர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ., பேசினார்