Paristamil Navigation Paristamil advert login

அசுத்தமாக வீடு காணப்பட்டால் அபராதம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு

 அசுத்தமாக வீடு காணப்பட்டால் அபராதம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு

24 கார்த்திகை 2023 வெள்ளி 08:26 | பார்வைகள் : 5853


சீனாவின் சிசுவான் பிராந்தியத்தின் தென்மேற்கில் உள்ள ப்யூகே பகுதியின் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாத்திரங்களை துலக்காமல் வைத்திருந்தாலோ, படுக்கையை அலங்கோலமாக வைத்திருந்தாலோ, உணவு பண்டங்களை பயன்படுத்தும் போது சூழ்நிலை சுகாதாரமற்று இருந்தாலோ, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மற்றும் வசிப்பிட சுகாதாரம் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த, "வாழும் சூழலை மேம்படுத்தும் தரமான வழிமுறைகள்" என ஒரு கொள்கையை ப்யூகே உள்ளாட்சி வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதன் ஒரு தொடர்ச்சியாக மக்களின் நடத்தையில் 14 சதவித அம்சங்களுக்கு கட்டுப்பாடுகளையும் உள்ளாட்சி அமைப்பு விதித்துள்ளது.


இனிமேல், உள்ளாட்சி அதிகாரிகள் பொதுமக்களின் வீடுகளுக்கு திடீரென சோதனையிட வருவார்கள். 

அவ்வாறு வரும் போது வீடுகளில் ஒட்டடை, குப்பைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் உள்ளிட்ட அசுத்தமான விடயங்கள் ஏதேனும் கண்ணில் பட்டால் அந்த வீட்டினருக்கு அபராதம் விதிக்கப்படும்.

ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்ட ஒரு வீட்டில் மீண்டும் இதே சூழ்நிலை நிலவினால் அபராத தொகை இரண்டு மடங்காக விதிக்கப்படும்.

"ஒரு விவசாயின் வீட்டிற்கு வந்தால் அங்கு நிலவும் சுகாதார சூழ்நிலை பார்க்க சகிக்கும்படியாக இல்லை. 

கொசுக்கள், நாய்கள் சூழ்ந்திருக்க ஒரு அசுத்தமான சூழலே நிலவுகிறது.

அபராதத்தால் மட்டுமே இதை தடுக்க முடியாது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். 

அபராதம் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்" என இந்த அறிவிப்பு தொடர்பில் ப்யூகே உள்ளாட்சி அமைப்பின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் பலர், இந்த உத்தரவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்