Paristamil Navigation Paristamil advert login

அமித் ஷா கூட்டத்திற்கு அனுமதி: மே.வங்க அரசின் மனு தள்ளுபடி

அமித் ஷா கூட்டத்திற்கு அனுமதி: மே.வங்க அரசின் மனு தள்ளுபடி

25 கார்த்திகை 2023 சனி 11:09 | பார்வைகள் : 4917


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை, கோல்கட்டா உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. 

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் 29ல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடக்க உள்ளது. 

இதற்கு அனுமதி கோரி கோல்கட்டா போலீசாரிடம் மாநில பா.ஜ., தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டது. குறித்த காலக்கெடுவுக்குள் அனுமதி கோரவில்லை என கூறி போலீசார் அனுமதி தர மறுத்தனர். 

இதை எதிர்த்து, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் பா.ஜ., தரப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ஹிரன்மய் பட்டாச்சார்யா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 

மேற்கு வங்கத்தில் குறிப்பாக கோல்கட்டாவில் ஊர்வலங்கள், பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடப்பது வழக்கமானது.

அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட எத்தனையோ பொதுக் கூட்டங்கள், போராட்ட நிகழ்வுகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளன.

அப்படி இருக்கையில் ஒரு கட்சியின் கூட்டத்திற்கு மட்டும் அனுமதி மறுக்க முடியாது. 

தனி நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பு சரியானது. அதில் நாங்கள் தலையிட முகாந்திரம் இல்லை. 

பொதுக் கூட்டத்திற்கு என போலீசார் வகுத்துள்ள 28 நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்