வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்?
27 கார்த்திகை 2023 திங்கள் 11:32 | பார்வைகள் : 1798
அந்தமான் தென்பகுதி மற்றும் அதையொட்டிய வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று(நவ.,27) உருவாகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில், நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலம் புயலாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடலோர மாவட்டங்களின் பல இடங்களில், இன்று பகல் வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 2ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
அந்தமானின் வடக்கு, தெற்கு பகுதிகள், வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதிகளில், இன்று முதல், 30ம் தேதி வரையிலும், வங்கக் கடலின் தென் மேற்கில், 30ம் தேதியும், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட தேதிகளில் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், ஆழ் கடலில் உள்ள மீனவர்கள், நாளைக்குள் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப வேண்டும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 1ம் தேதியையொட்டி, புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அந்த புயல், ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரை கடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.