அமெரிக்கா, ஐரோப்பாவில் உயர்கிறது வர்த்தகம்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி
28 கார்த்திகை 2023 செவ்வாய் 06:29 | பார்வைகள் : 1940
ரஷ்யா - உக்ரைன் போரால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பின்னலாடை சில்லரை வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு அக்., - நவ., மாதங்களை காட்டிலும், தற்போது சில்லரை வர்த்தகம், 10 சதவீதம் வரை உயர்ந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இரு பெரும் கொரோனா தொற்று காலங்களில், அத்தியாவசிய தேவைகள் நீங்கலாக, மற்ற நடமாட்டத்தை உலக நாடுகள் அனுமதிக்கவில்லை. இதனால் அந்நாடுகளின் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்தன.
தொற்று ஊரடங்கு மத்தியில், வரலாறு காணாத அளவுக்கு வர்த்தகம் உயர்ந்தது. வளர்ந்த பொருளாதார நாடுகள் அளித்த சலுகையால், அந்நாட்டு நிறுவனங்களும், மக்களும், அடுத்து வரும் ஆண்டுகளுக்கான தேவைக்காக, கூடுதல் ஆர்டர்களை வாரி கொடுத்தனர்.<br><br>இரண்டாவது தொற்று காலத்தில், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிடங்குகளில் சரக்குகள் தேக்கமடைந்தன. சில்லரை வர்த்தகத்தில் சறுக்கல் ஏற்பட்டது.
உக்ரைன் போர்
இக்கட்டான நிலையில் இருந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீண்டு வந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் அறிவிப்பு, தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தின. மக்களின் இயல்பான நுகர்வு நிலையில் மாறுதல் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில், சிக்கன நடவடிக்கை பின்பற்றப்பட்டது.
எதிர்பாராதவிதமாக, அமெரிக்காவிலும் பணவீக்கம் ஏற்பட்டது. பிரிட்டனும், பணவீக்க பாதிப்பில் இருந்து தப்பவில்லை.
நாட்டின் பின்னலாடை தலைநகராக உள்ள திருப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாடுகளுடன், 70 சதவீத ஏற்றுமதி வர்த்தக தொடர்பு வைத்துள்ளது. அந்த நாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, திருப்பூரில் எதிரொலிக்கிறது.
ஒன்றரை ஆண்டுகள், சவால்களும், சறுக்கல்களும் நிறைந்ததாக கழிந்துள்ளன. விடா முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் பெயர் பெற்ற திருப்பூர் தொழில் துறையினர், கடும் சவால்களை வெற்றிகரமாக சமாளித்து வருகின்றனர்.
சில்லரை வர்த்தகம்
இந்நிலையில், அமெரிக்க சில்லரை வர்த்தகத்தில் திடீர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில்லரை வர்த்தக நிறுவன கிடங்குகளில், சரக்குகள் வேகமாக விற்று தீர்கின்றன. உற்பத்தி நாடுகளில் தேங்கியிருந்த சரக்குகளும் வேகமாக நகர துவங்கியுள்ளன.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில், கடந்த ஆண்டு அக்., - நவ., மாதம் இருந்ததை காட்டிலும், இந்தாண்டில் சில்லரை வர்த்தகம், 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
முன்னணி வர்த்தக நிறுவனங்கள், அடுத்த ஆண்டுக்கான தேவைகள் குறித்து அறிக்கை அனுப்பி வருகின்றன. தொற்று மற்றும் போர் சூழலில், அதிக சரக்கு இருப்பு வைத்ததால், சில்லரை வர்த்தக நிறுவனங்கள் பாதித்தன. விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டதால், அந்நிறுவனங்கள் ஆடை கொள்முதலில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளன.
புதிய மாற்றம் குறித்து, ஏற்றுமதியாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உதாரணமாக, ஒரே ஆர்டரில், ஒரு லட்சம், 'டி-சர்ட்' வாங்குவதற்கு பதிலாக, ஆர்டர் அளித்தாலும், ஆடைகளை மூன்று அல்லது நான்கு தவணைகளாக பெற்றுக் கொள்ளவே விரும்புகின்றனர்.
இந்தியா போன்ற உற்பத்தி நாடுகளில், சிறு பின்னடைவு இருந்தாலும், அடுத்த ஐந்து மாதங்களுக்குள் நிலைமை சீராகிவிடும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.